×

கஞ்சா நிரப்பிய பீடி, சிகரெட் விற்பனை அமோகம்... வட மாநிலத்தில் இருந்து சப்ளை

ஆரல்வாய்மொழி: ஆரல்வாய்மொழி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வட மாநிலங்களில் இருந்து கஞ்சா நிரப்பிய பீடி, சிகரெட் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளன. இதை காவல்துறையினர் தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆரல்வாய்மொழி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான செங்கல் சூளைகள் உள்ளன. இவற்றில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் அதிகம் பேர் வேலை பார்க்கிறார்கள். புரோக்கர்கள் மூலமாகவே இவர்கள் இங்கு வேலைக்கு வருகிறார்கள். இவர்களை வேலைக்கு சேர்க்கும் செங்கல் சூளை உரிமையாளர்கள் அந்த தொழிலாளியின் விபரத்தை பற்றி விசாரிப்பது இல்லை. முகவரி ஆவணங்களையும் கேட்பதில்லை. தொழிலாளர்கள் போர்வையில் கஞ்சா விற்பனை கும்பலும் இங்கு வருகிறது. இவர்கள் மாதம் ஒருமுறை அல்லது இருமுறை அவர்களின் மாநிலங்களுக்கு சென்று கஞ்சா நிரப்பப்பட்ட பீடி, சிகரெட்டை கொண்டு வந்து அதிகளவில் சப்ளை செய்கிறார்கள். வட மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமின்றி, குமரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களும் கஞ்சா நிரப்பப்பட்ட பீடி, சிகரெட் வாங்க போட்டி போடுகிறார்கள். இதை பயன்படுத்தி அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள். இதை கொண்டு வருபவர்கள் சொகுசு கார்களில் வந்திறங்குகிறார்கள். நேராக செங்கல் சூளைகளுக்குள் சென்று டீ, காபி கொடுப்பது போல் கஞ்சாவால் ஆன பீடி, சிகரெட்டுகளை கொடுத்து பணத்தை வசூலிக்கிறார்கள். வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு சம்பந்தப்பட்டவர் சாதாரண பீடி, சிகரெட் குடிப்பது போல் இருக்கும். ஆனால் உள்ளே கஞ்சா இருக்கும். இதற்கு அடிமையானவர்கள் அதிக விலை கொடுத்தும் இதை வாங்குகிறார்கள்.

தற்போது செங்கல் சூளைகளில் 70 சதவீத தொழிலாளர்கள் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் உள்ளனர். இப்படி வேலைக்கு வந்தவர்களின் பின்புலம் என்ன? இவர்கள் மீது ஏதாவது குற்ற செயல்கள், வழக்குகள் உள்ளதா? என்பதெல்லாம் சம்பந்தப்பட்ட செங்கல் சூளை உரிமையாளர்களுக்கு தெரியாது. நாகர்கோவில், ஆரல்வாய்மொழி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சமீப காலங்களாக அதிகமாக நடந்து வரும் திருட்டு சம்பவங்களிலும் வட மாநில கும்பல் இருக்கலாமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே காவல் துறை உடனடியாக செங்கல் சூளை உரிமையாளர்களை அழைத்து பேச வேண்டும். செங்கல்சூளையில் பணியாற்றுகிறவர்களின் முழு முகவரிகள், புகைப்படத்துடன் தயாரிக்க வேண்டும். அவர்களின் கைரேகைகளையும் பதிவு செய்ய வேண்டும். சிசிடிஎன்எஸ் மூலம் இவர்கள் மீது ஏதாவது குற்ற வழக்குகள் உள்ளதா? என்பதை கண்டறிய வேண்டும். அப்போது தான் குற்றவாளிகள், கஞ்சா விற்பனையாளர்கள் ஊடுருவலை தடுக்க முடியும் என்று பொதுமக்கள் கூறி உள்ளனர்.

Tags : North , Aralvaymoli, cigarette, sales
× RELATED வடகொரியா ஏவுகணை சோதனை