×

கூத்தாநல்லூரில் கஜா புயலால் பாதிப்பு... சார்பதிவாளர் அலுவலக வாயிலில் இடையூறாக கிடக்கும் மரங்கள்

கூத்தாநல்லூர்: கூத்தாநல்லூர் சார்பதிவாளர் அலுவலக வாசலில் கிடக்கும் மரங்களை உடனடியாக அகற்றி பொதுமக்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும், பத்திரப்பதிவு செய்ய அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் வெயிலில் நிற்கும் நிலையை மாற்றி நிழல்தரும் பந்தல் அமைத்து தரவேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கூத்தாநல்லூர் தாலுகாவில் உள்ள சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்ளுக்கு பயன்படும் வகையில் அமைக்கப்பட்டது கூத்தாநல்லூர் சார்பதிவாளர் அலுவலகம். வெண்ணாற்றின் கரையோரம் பாய்க்கார பலம் மார்க்கெட் அருகே அமைந்திருக்கும் இந்த அலுவலகத்தில் தான் பத்திரப்பதிவுகள் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அலுவலகத்தின் எதிரே இருந்த இரண்டு பிரமாண்ட அரசமரங்கள் சமீபத்தில் வீசிய கஜா புயலின் தாக்கத்தால் வேரோடு சாய்ந்தன. சாய்ந்த மரங்களின் கிளைகளை மட்டும் அவசர கதியில் அப்புறப்படுத்திவிட்டு அலுவலகம் இயங்கி வருகிறது. ஆனால் அந்த மரத்தின் வேர்களை அகற்றும் முயற்சியில் இன்று வரை அரசு ஈடுபடவில்லை. இதனால் பதிவுத்துறை அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் நிற்க கூட இடமின்றி தவித்து வருகின்றனர். மேலும் நிழல் தருவதற்கு அங்கு எந்தவிமான நிழற்கூறைகளும் அமைக்கப்படவில்லை.

இதுகுறித்து நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் கருணாநிதி கூறியதாவது, கூத்தாநல்லுர் பகுதியில் நடைபெறும் பத்திரப்பதிவு பரிமாற்றங்கள்தான் திருவாரூர் மாவட்டத்தில் அதிக அளவிலான பரிமாற்றங்கள் என்று குறிப்பிடலாம். அந்த அளவுக்கு அதிக அளவிலான பத்திரப்பதிவு வருமானங்களை கொண்டதாக இயங்கும் இந்த சார்பதிவாளர் அலுவலகம் பதிவிற்காக வரும் பொதுமக்கள் உட்காருவதற்குகூட இடமின்றி கிடக்கின்றது. இவ்வளவு வருமானத்தை தரும் இந்த அலுவலகத்தை மறைத்தபடி கிடக்கும் இந்த அரசமர வேர்களை அகற்றுவதற்கு எந்தவித முயற்சியும் மேற்கொள்ளப்படாதது ஏன்? என்றும் தெரியவில்லை. மேலும் பத்திரப்பதிவுக்காக பத்திரங்கள் எழுத பதிவு அலுவலகத்திற்கு வெகு தூரத்தில்தான் பதிவுபெற்ற பத்திர எழுத்தர்கள் அலுவலகம் உள்ளது. இதனாலும் பத்திரப்பதிவில் தாமதமும் ஏற்படுகிறது. எனவே உடனடியாக சார்பதிவாளர் அலுவலகத்தின் வாசலை மறைத்து கிடக்கும் அரச மரவேர்களை அப்புறப்படுத்த துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு பத்திர எழுத்தர்களை பதிவாளர் அலுவலக வளாகத்திற்கு வெளியே பொதுமக்களுக்கு பயன் தரும் வகையில் அருகில் அலுவலகம் அமைக்க அனுமதிக்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டார். கூத்தாநல்லூர் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் கோஸ் அன்வர்தீன் கூறியதாவது.

கூத்தாநல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்தின் வாசலில் பொதுமக்களுக்கு நிழல் தரும் வகையில் கூத்தாநல்லூர் லீக் அமைப்பின் சார்பில் ஷெட் போட்டு தரப்பட்டு இருந்தது. அதுவும் கஜாபுயலினால் விழுந்து கிடக்கிறது. அதேபோல அரசமரங்களும் விழுந்து கிடக்கின்றன. விழுந்து கிடக்கும் ஷெட்டை இன்னமும் எடுத்து புதுப்பிக்க அரசு முன்வரவில்லை. பதிவுக்காக வரும் பொதுமக்கள் கொளுத்தும் வெயிலிலும் மழையிலும் நிற்கவேண்டிய நிலை உள்ளது. தாலுகாவிற்கு வருமானத்தை தரும் இந்த அலுவலகத்தை உடனடியாக புதுப்பித்து பொதுமக்களுக்கு ஏற்படும் அசவுகரியங்களை போக்க வேண்டும் எனவும் கூறினார். எனவே மாவட்ட சார்பதிவாளர் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு கூத்தாநல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்தின் வாசலில் விழுந்து கிடக்கும் அரசமர வேர்களை உடனடியாக அகற்றி, பொதுமக்களுக்கு நிழல்தரும் வகையில் ஷெட் அமைத்து தரவேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Koothanallur ,Resident Officer ,office , Koothanallur, Registrar
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்