×

குற்றாலத்தில் பாழடைந்து கிடக்கும் பேரூராட்சி விடுதிகள்... அடிப்படை வசதிகள் இல்லாததால் ஆண்டுதோறும் தவிக்கும் சுற்றுலா பயணிகள்

தென்காசி: குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் துவங்குவதற்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில் இன்னும் வளர்ச்சிப் பணிகள் எதுவும் துவங்கவில்லை. பேரூராட்சி விடுதிகள் புதர்மண்டி கிடப்பதால் நடுத்தர வர்க்க சுற்றுலா பயணிகள் பெரும் கவலையடைந்துள்ளனர். குற்றாலத்தில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் காலம் ஆகும். தென்மேற்கு பருவமழைக்காலமே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப்பகுதியான குற்றாலத்தில் சீசன் காலம் என்று அழைக்கப்படுகிறது. சீசனுக்கு முன்னோடியாக திகழும் பருவ காற்று நன்றாக உள்ளதால் இன்னும் ஓரிரு தினங்களில் சீசன் துவங்கலாம் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மக்களவை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதாலும் குற்றாலத்தில் கடந்த 2 மாதங்களாக எவ்வித வளர்ச்சிப்பணிகளையும் மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. குற்றாலத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கோவில் சன்னதி பஜார் பகுதிகளில் அமைக்கப்படும் தற்காலிக கடைகளுக்கு இதுவரை ஏலம் விடப்படவில்லை. பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் கார் பார்க்கிங் கட்டண வசூல் உரிமம் உள்ளிட்டவை ஏலம் விடப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக வளர்ச்சிப்பணிகளை மட்டும் மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.

வழக்கமாக சீசன் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய வசதிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய்துறை, காவல்துறை மற்றும் பல அரசு துறை அதிகார்கள் ஆலோசனை கூட்டம் நடத்துவது வழக்கம். அதே போன்று ஏப்ரல் அல்லது மே மாதத்தில் குற்றாலத்தில் விடுதி பராமரிப்பு பணிகள், பூங்கா சீரமைப்பு, சுகாதார மேம்பாட்டு பணிகள் ஆகியவை துவங்கிவிடும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை அப்படி எதுவும் நடத்த முடியாத நிலை உள்ளது. குற்றாலம் அனைத்து தரப்பு மக்களும் குடும்பத்துடன் வந்து செல்லும் அற்புதமான சுற்றுலாத்தலமாக திகழ்கிறது. சீசன் சமயமான 90 நாட்களில் மட்டும் சராசரியாக 60 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக ஆடி மாதம் எனப்படும் ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து குடும்பத்துடன் தங்கியிருந்து சீசனை அனுபவிக்கின்றனர். ஆடி மாதத்தில் குற்றாலத்தில் தனியார் விடுதிகளிலும், தற்காலிகமாக விடுதிகளாக செயல்படும் வீடுகளிலும் கூட வாடகைக்கு அறைகள் கிடைப்பது இல்லை. அவ்வாறு கிடைத்தாலும் கட்டணம் அதிகமாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டு பேரூராட்சி சார்பில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தென்காசி சாலை தங்கும் விடுதி, செங்கோட்டை சாலை தங்கும் விடுதி, ரோஜா விடுதி, மல்லிகை, அருவி இல்லம், மெயினருவி தங்கும் குடில்கள், தென்காசி சாலை தங்கும் விடுதிகள் போன்றவை கட்டப்பட்டது. தனியார் விடுதிகளை விட இங்கு அறைகள் விசாலமாக இருக்கும். கார் பார்க்கிங் வசதிகள் உண்டு. வாடகையும் மிகவும் குறைவு. இதனால் சுற்றுலா பயணிகள் மத்தியில் பேரூராட்சி விடுதிகளில் தங்குவதற்கு அதிக ஆர்வம் காணப்படும்.

மொத்தம் இருநூற்றுக்கும் மேற்பட்ட அறைகள் பேரூராட்சி வசம் உள்ளது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பல விடுதிகள் பராமரிப்புக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாத காரணத்தால் அவை பராமரிப்பு இல்லாமல் பாழடைந்த நிலையில் கிடக்கிறது. குறிப்பாக தென்காசி சாலை குடில்கள், மல்லிகை இல்லம் ஆகியவை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கதவுகள், ஜன்னல்கள் இல்லாமலும் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களும் நடைபெறும் நிலையில் உள்ளது. தென்காசி சாலை தங்கும் விடுதியில் மொத்தம் 21 அறைகள் உள்ளது. இவற்றில் ஐந்து அறைகள் மட்டுமே ஓரளவு தங்குவதற்கு ஏற்ற நிலையில் உள்ளது. 14 குடில்களில் இரண்டை மின்வாரியம் உள்ளிட்ட அரசு பயன்பாட்டிற்கு கொடுத்துவிட்ட நிலையில் மீதமுள்ள 12 குடில்களுமே பாழடைந்த நிலையில் உள்ளது. ரோஜா காட்டேஜில் மொத்தம் 24 அறைகள் உள்ளன. இவற்றில் மாடியில் உள்ள 12 அறைகள் மட்டுமே ஓரளவு தங்குவதற்கு ஏற்ற நிலையில் உள்ளது. தரை தளத்தில் உள்ள 12 அறைகளும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மல்லிகை விடுதியில் உள்ளா 20 அறைகளில் பத்துக்கும் குறைவானவற்றில் மட்டும் தங்குவதற்கான சூழல் உள்ளது. மெயினருவி குடில்களில் மொத்தம் 88 அறைகள் உள்ளது. இவை ஓரளவு பராமரிக்கப்பட்டாலும், உயரத்தில் உள்ள 14 குடில்கள் மோசமான நிலையில் உள்ளது.

அருவி இல்லத்தில் கூட்டம் நடத்துவதற்கு தேவையான 6 ஹால்கள் உள்ளது. இவை அனைத்துமே மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. செங்கோட்டை சாலை தங்கும் விடுதியில் மொத்தம் 36 அறைகளும், 4 மீட்டிங் ஹால்களும் உள்ளது. இவற்றை தனி நபருக்கு ஆண்டு குத்தகைக்கு பேரூராட்சி நிர்வாகம் வழங்கியுள்ளது. ஆண்டு ஒன்றுக்கு இந்த விடுதியிலிருந்து ஐந்து லட்ச ரூபாய் ஏலம் மூலம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கிடைக்கிறது. இதனால் அடிப்படை வசதிகள் கிடைக்காமல் ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் தவிக்கின்றனர். தமிழக அரசு சிறப்பு நிதி வழங்கினால் மட்டுமே விடுதிகளை காப்பாற்றமுடியும் என்ற நிலை உள்ளது. நிதியை பெறுவதற்காக கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் யாவும் பலனளிக்காத நிலையில் விடுதிகள் நாளுக்கு நாள் பாழடைந்துவருவது குறிப்பிடத்தக்கது.

உண்மை நிலவரம் கலெக்டருக்கு தெரியுமா?

கடந்த ஆண்டு மே மாதம் சீசனுக்கு முன் நெல்லையின் புதிய கலெக்டராக பொறுப்பேற்ற ஷில்பா பிரபாகர் சதீஷ் சீசன் காலத்தில் இருமுறை குற்றாலத்தில் ஆய்வு நடத்தி சுற்றுலா பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அங்குள்ள குடிநீர் தொட்டியில் தண்ணீரை கூட சோதித்தார். ஆனால் அவையாவும் கலெக்டர் வருகைக்காக மட்டுமே சீரமைக்கப்பட்டிருந்ததும், கலெக்டர் வருகைக்காக சீரமைக்கப்பட்ட அவை, சில நாட்களிலேயே பழைய நிலைக்கு சென்று விட்டதும் கலெக்டர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவில்லை. இதனால் ஓராண்டிற்கு முன்பே சீரமைக்கப்பட்டிருக்க வேண்டிய விடுதிகள் எல்லாம் இன்னமும் பாழடைந்தே கிடக்கிறது. எனவே கலெக்டர் குற்றாலத்திற்கு திடீரென விசிட் செய்து இங்குள்ள வசதிகளை ஆய்வு செய்தால் மட்டுமே உண்மை நிலவரம் தெரியவரும் என்றும், உலக சுற்றுலா வரைபடத்தில் இடம்பெறும் தகுதி படைத்த குற்றாலத்தில் நிலவும் அவலநிலை அவருக்கு தெரியும் என்றும் சமூகநல ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

Tags : Tourist holidays ,facilities , Tourists, Kutralam
× RELATED வாக்குச்சாவடிகள் அடிப்படை வசதிகள்...