×

இறுதிக்கட்டத்தில் கோடை விடுமுறை... ஒகேனக்கல், ஏற்காடு, மேட்டூரில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

பென்னாகரம்: கோடை விடுமுறை முடியும் தருவாயில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களான ஒகேனக்கல், மேட்டூர் மற்றும் ஏற்காட்டில் நேற்று சுமார் ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கர்நாடகா மாநிலத்தில் குடகு மாவட்டத்தில் உற்பத்தியாகும் காவிரி ஆறு, தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியில் தமிழகத்திற்குள் நுழைகிறது. ஒகேனக்கல் காவிரியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வரத்து காணப்படுகிறது. தமிழகம் நோக்கி பாய்ந்து வரும் காவிரி, ஓங்கி உயர்ந்த மலை முகடுகளிலிருந்து அருவியாய் கொட்டுவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இதனை காண்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் தினசரி சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். பிப்ரவரி மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்ததால் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இருமடங்கானது. இந்நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறையை தொடர்ந்து சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை தினசரி 50 ஆயிரத்தை தாண்டியது.

இந்நிலையில், கோடை விடுமுறை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனையொட்டியும், வாரவிடுமுறை கொண்டாட்டத்திற்காகவும் ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு நேற்று முன்தினம் பல்வேறு இடங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் வந்து குவிந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் விடுதிகளில் அறை எடுத்து ஒகேனக்கல்லிலேயே தங்கியிருந்தனர். தொடர்ந்து நேற்று 2வது நாளாக சுமார் 50 ஆயிரம் பேர் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தனர். இதனால், எங்கு பார்த்தாலும் கூட்டமாக காணப்பட்டது. அதேவேளையில் ஒகேனக்கல் காவிரியில் வரும் நீரின் அளவும் அதிகரித்தது. விநாடிக்கு 900 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், சினிபால்ஸ், மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். மேலும், ஏராளமானோர் காவிரி ஆற்றிலும் குடும்பத்தோடு குளித்தனர். பின்னர், காவிரியில் உல்லாச பரிசல் சவாரி செய்து மகிழ்ந்தனர். தொடர்ந்து மீன் குழம்புடன் கூடிய உணவு உண்டு மகிழ்ந்தனர். இதேபோல், சேலம் மாவட்டம் மேட்டூரில் சுற்றுலா பயணிகள் திரண்டனர். சேலம் மாவட்டம் மட்டுமின்றி அண்டைய மாவட்டங்களான ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து குடும்பத்தோடு சுற்றுலா வந்திருந்தனர். அணை முனியப்பன் சுவாமியை வழிபட்ட அனைவரும், அணை பூங்காவிற்கு சென்று குடும்பத்தோடு உண்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து அங்குள்ள மான் பண்ணை, பாம்பு பண்ணை மற்றும் மீன் காட்சியகத்தை கண்டு ரசித்தனர். தொடர்ந்து மேட்டூர் அணையின் காட்சி முனையத்திற்கு சென்று, அங்கிருந்தவாறு அணையின் முழு தோற்றத்தினையும் பார்த்து பரவசமடைந்தனர்.

ஏற்காட்டிலும் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, அண்டைய மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளாவில் இருந்தும் ஏராளமானோர் சுற்றுலா வந்திருந்தனர். கோடை விழாவிற்காக அண்ணா பூங்காவில் தயார்படுத்தப்பட்டுள்ள பல்வேறு மலர்செடிகளை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள், மான் பூங்கா, ஏரி பூங்காவையும் சுற்றிப்பார்த்தனர். பின்னர், ஏற்காடு ஏரியில் குடும்பத்தோடு உற்சாக பரிசல் சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும், ரோஜா பூங்கா மற்றும் தாவரவியல் பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ட்ஸ் சீட், பக்கோடா பாய்ண்ட் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர். தொடர்ந்து ஏற்காடு சேர்வராயன் சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு தங்களது ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். ஏற்காட்டில் நேற்று சுற்றுலா பயணிகள் திரண்டதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து உள்ளூர்வாசிகள் கூறுகையில், ‘கோடை விடுமுறை முடியும் தருவாயில் ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களை எதிர்நோக்கி பல்வேறு இடங்களில் சாலையோரம் கடைகளை விரித்து தின்பண்டங்கள் மற்றும் விளையாட்டு பொருட்களை பரப்பி வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால், போக்குவரத்து பாதிப்பு என்பது தொடர்கதையாகி உள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்தினை சீர்செய்ய வேண்டும்,’ என்றனர்.

Tags : summer holidays ,final ,Hogenakkal ,Mettur ,Yercaud , Hogenakkal, Yercaud, Mettur, Tourism
× RELATED மகளிர் பிரீமியர் இறுதி போட்டிக்கு...