×

பின்னலாடை நிறுவனங்களுக்கு வழங்கி வந்த சலுகைகள் பறிப்பு: மீண்டும் வழங்க தொழில் துறையினர் கோரிக்கை

திருப்பூர்: உலக வர்த்தக ஒப்பந்தப்படி மத்திய அரசு வழங்கி வந்த சலுகைகளை நிறுத்தப்பட்டதால் தொழில்துறையினர் பாதிக்கப்படுகின்றனர். இதனால் தொழில் முனைவோர் தங்களுடைய தயாரிப்புகளை கழிவுகள் இன்றி தரமான பொருட்களை உற்பத்தி செய்து உள்நாடு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் மட்டுமே லாபத்தை ஈட்ட முடியுமென தொழில் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் பருத்தி 3.5 லட்சம் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் பருத்தி விவசாயிகளுக்கு முன் பணம் வழங்கி மொத்த பருத்தியையும் கொள்முதல் செய்கின்றனர். இந்திய பருத்திக்கு உலக மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு இருப்பதால் விற்பனை செய்துவிட்டு வெளிநாடுகளிலிருந்து பஞ்சை இறக்குமதி செய்து கொல்கத்தா துறைமுக குடோன்களில் இருப்பு வைத்து இந்தியா முழுவதும் உள்ள பஞ்சாலைகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். 356 கிலோ எடையுள்ள ஒரு பேல் பஞ்சு ரூ.46 ஆயிரத்திற்கு விற்பனை செய்கின்றனர். பஞ்சு விலை நிலையாக இல்லாததால் நூல் விலையும் ஏறுமுகமாக உள்ளது. இதனால் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் பையர்களிடம் உறுதியான விலையை கூறமுடியாத நிலை உள்ளது. துணிகளுக்கு பல்வேறு கலர்களில் சாயம் ஏற்றி தரும் சாயப்பட்டறைகளில் பயன்படும் மூலப்பொருட்களில் விலையேற்றம், ஊசி, எலாஸ்டிக், தையல் கூலி, இயந்தரங்கள் உதிரி பாகங்கள் என பல்வேறு பொருட்கனின் விலை அதிகரித்துள்ளது. பின்னலாடை துறைக்கு தேவையான மூலப்பொருட்கள் அடிக்கடி விலையேற்றத்தால் தொழில்துறையினர் தனியார் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கி தொழில் செய்ய வேண்டிய பரிதாபமான நிலை ஏற்பட்டுள்ளது. பருத்தி பஞ்சின் விலை 3 மாதங்களுக்கு விலையில் மாற்றம் இருக்கக்கூடாது. மத்திய அரசு கடந்த காலங்களில் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு டியூட்டி டிராபேக் மூலம் 24 சதம் சலுகை வழங்கி வந்தது. அது படிப்படியாக குறைந்து தற்போது 4 சதமாக குறைக்கப்பட்டுள்ளது. உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.

இதனால், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வழங்கி வந்த சலுகைகள் அனைத்தும் சில மாதங்கள், சில ஆண்டுகளில் அடியோடு நிறுத்தப்படும் அபாயம் உள்ளது. தொழில் முனைவோர் லாபத்தை வெளிமார்க்கெட்டில் இனி பார்ப்பது சிரமம். தங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் தண்ணீர், மின்சாரம் ஆகியவை சிக்கனம், கழிவுகள் இன்றி தரமான பொருட்கள் உற்பத்தி ஆகியவற்றால் தான் தொழில் முனைவோர் லாபத்தை பார்க்க முடியும். உற்பத்தியை அதிகரிக்கும் நவீன இயந்திரங்கள் இறக்குமதி, மின்சாரத்தை பயன்படுத்தாமல் சோலார் மூலம் இயக்கம், தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி , தண்ணீரை குறைந்த அளவு பயன்படுத்துதல், பின்னலாடை இயந்திரங்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் தனித்தனியாக டீலர்களிடம் வாங்காமல் உற்பத்தியாளர்களிடம் நேரடியாக குறைந்த விலைக்கு வாங்கி இருப்பு வைத்துக்கொள்ளவேண்டும். ஒவ்வொரு பொருட்களின் மீது அக்கறையோடு கண்காணித்தால் மட்டுமே தொடர்ந்து தொழில்களை சிறப்பாக லாப நோக்கோடு நடத்த முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

இதுகுறித்து ஏற்றுமதியாளர் சங்கத்தின் உறுப்பினர் சேர்க்கை துணைக்குழு தலைவர் செந்தில்குமார் கூறுகையில், திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் பல்வேறு இடர்பாடுகளிடையே தொடர்ந்து இயங்கி வருகிறது. தொழில் முனைவோர் இதுவரை ஜிஎஸ்டி., கிடைக்கவில்லையென குறைகூறுவது வேதனையாக உள்ளது. திருப்பூரில் பதிவு செய்துள்ள 1350 பின்னலாடை நிறுவனங்களில் 600 நிறுவனங்கள் மட்டுமே முறையாக ஜி.எஸ்.டி. க்கு விண்ணபித்து ரீபண்ட் தொகை வாங்கியுள்ளனர். விண்ணப்பிக்காமலேயே கிடைக்கவில்லை என குறைகூறக்கூடாது. முறையாக ஆவனங்களை தயார் செய்து ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் விண்ணப்பித்து உடனடியாக நிலுவை தொகையை பெறலாம். இதற்காக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தில் தனி குழு செயல்படுகிறது. ஆலோசனை பெறலாம். பின்னலாடை இயந்திரங்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் ஒவ்வொரு பொருளாக டீலர்களிடம் வாங்கும் போது விலை அதிகமாக இருக்கும். இதற்காக சங்கத்தின் சார்பில் கொள்முதல் குழு துவங்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் உறுப்பினர்களாக சேரவேண்டும். இந்த குழு மூலம் பொருட்கள் உற்பத்தியாளரிடம் நேரடியாக தொடர்பு கொண்டு குறைவான விலைக்கு வாங்கி கொள்முதல் குழு மூலம் இருப்பு வைக்கப்படுகிறது. பின்னலாடை நிறுவனங்கள் தேவைப்படும் போது பணத்தை கொடுத்து வாங்கிக்கொள்ளலாம். இந்தியாவில் உற்பத்தி செலவை குறைத்தால் மட்டுமே நமது போட்டி நாடுகளுடன் போட்டியிட்டு தரமான பொருட்களை குறைந்த விலைக்கு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பின்னலாடை சந்தையை பிடிக்க முடியும். தொழிற்சாலைகளுக்குள் நாம் எடுக்கும் ஒவ்வொரு சிக்கன நடவடிக்கையால் மட்டுமே லாபத்தை எதிர்பார்க்க முடியும். இந்தியாவில் உற்பத்தியாகும் பஞ்சு ஏற்றுமதிக்கு தடை செய்து இந்திய பருத்தி கழகம் மூலம் கொள்முதல் செய்து பஞ்சாலைகளுக்கு பிரித்து வழங்கவேண்டும், என்றார்.


Tags : Knitwear Institutions , Industry, knitwear
× RELATED ஜப்பான், இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!!