×

ராமேஸ்வரத்தில் திடீர் பரபரப்பு உள்வாங்கியது அக்னிதீர்த்த கடல்

* பொதுமக்கள் அச்சம்

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கடற்பகுதியில் பலத்த காற்று வீசி வரும் நிலையில், அக்னி தீர்த்த கடல் திடீரென உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ராமேஸ்வரம், தனுஷ்கோடி தென்கடல், பாம்பன் கடல் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த காற்று வீசுவதால், கடலும் சீற்றத்துடன் காணப்படுகிறது. காற்று தொடர்ந்து வீசி வந்த நிலையில், அக்னிதீர்த்த கடற்கரையில் கடல் திடீரென நேற்று உள்வாங்கியது. நேற்று காலை முதல் பிற்பகல் வரை அக்னிதீர்த்த கடல் உள்வாங்கி காணப்பட்டதால் பக்தர்கள் தீர்த்தமாடும் இடத்தில் கடல்நீர் வற்றி பாறைகள் வெளியே தெரிந்தது.

இதனால் நேற்று காலை அக்னி தீர்த்த கடற்கரையில் இருந்து 100 அடி தூரத்திற்கு கடலுக்குள் சென்று பக்தர்கள் தீர்த்தமாடினர். கடல்நீர் வற்றிப்போன நிலையில் பக்தர்களால் வீசியெறியப்பட்டு பல நாட்களாக கடலடியில் அமிழ்ந்து கிடந்த பிளாஸ்டிக் பாட்டில், பை போன்ற குப்பைகள் வெளியே தெரிந்தது. பகல் 12 மணிக்கு மேல் நேரம் செல்லச் செல்ல கடல் நீர்மட்டம் உயர்ந்ததால் பிற்பகலுக்கு மேல் அக்னிதீர்த்த கடல் வழக்கம் போல் காட்சியளித்தது. திடீரென கடல் உள்வாங்கியதால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அச்சமடைந்தனர்.

Tags : Rameswaram , Rameshwaram , agni theertham,people
× RELATED சென்னை – ராமேஸ்வரம் விரைவு ரயில் இன்று...