×

ராமநாதபுரத்தில் பரபரப்பு ‘அம்மா வாட்டர்’ விற்ற பணம் அபேஸ்

* வங்கியில் கட்டாமல் லட்சக்கணக்கில் சுருட்டினார் கேஷியர்

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் அம்மா வாட்டர் பாட்டில் விற்பனையில் பல லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் உள்ள ஓட்டுநர் பயிற்சி மையத்தில் வாட்டர் பிளான்ட் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து அரசு விரைவு பஸ்கள் மூலம் தமிழகத்திலுள்ள 250க்கும் அதிகமான பஸ் நிலையங்களுக்கு அம்மா வாட்டர் பாட்டில் அனுப்பி வைக்கப்படுகிறது. ராமநாதபுரம் பஸ் நிலையத்திற்கு தினமும் 700 பாட்டில் வருகிறது. ஓய்வு பெற்ற ஊழியர் சண்முகவேல் என்பவர் மூலம் தண்ணீர் பாட்டில் விற்பனை நடக்கிறது. ஒரு பாட்டில் விலை ரூ.10 என விற்பனை செய்யப்படுகிறது.

தினமும் விற்பனையாகும் தண்ணீர் பாட்டில்களுக்கான பணத்தை சேல்ஸ்மேன் சண்முகவேல், டிப்போவில் கேஷியரான பட்டினம்காத்தானை சேர்ந்த ராஜாத்தி (35) என்பவரிடம் செலுத்தி அதற்கான ரசீதில் கையெழுத்தும் பெற்றுள்ளார். ராமநாதபுரம் இந்தியன் வங்கியில் பஸ் டிக்கெட் வசூல் பணத்தை செலுத்தும் போது, அம்மா வாட்டர் பாட்டில் விற்பனை பணத்தை செலுத்த வேண்டும். பணம் செலுத்தியதற்கான சலானை அதற்கென பராமரிக்கப்படும் பதிவேட்டில் ஒட்டி வைத்து பாதுகாத்து வரவேண்டும்.

அம்மா வாட்டர் பாட்டில் விற்பனை செய்த பணத்தை கடந்த பல மாதங்களாக முறையாக வங்கியில் கட்டாமல் லட்சக்கணக்கில் கேஷியர் கையாடல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. வங்கியில் பணம் செலுத்தியது போல் சலான் எழுதி டூப்ளிகெட் சீல் வைத்து அலுவலக பதிவேட்டில் வைத்துள்ளதாக தெரிகிறது. ஒரு வருடத்திற்கு மேல் நடந்த இந்த கையாடல் அலுவலக ஆண்டு தணிக்கையின் போது சில நாட்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது.

பணம் கையாடல் தொடர்பாக கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் ரவீந்திரன், விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட கிளை மேலாளர் பத்மகுமாருக்கு உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் அரசு போக்குவரத்து தொழிலாளர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விற்பனையாளர் சண்முகவேலிடம் கேட்டபோது, ‘‘கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் அம்மா வாட்டர் பாட்டில் விற்பனை செய்கிறேன். தினசரி விற்பனையாகும் பணத்தை டிப்போ கேஷியரிடம் செலுத்துவேன். பின்னர் பணம் கட்டியதற்கான ரசீது புத்தகத்தில் கேஷியர், மேனேஜர் இருவரிடம் கையெழுத்து வாங்கி விடுவேன். டிப்போவில் நான் பணம் செலுத்தியதற்கான ஆவணங்கள் என்னிடம் உள்ளது’’ என்றார்.

கிளை மேலாளர் பத்மகுமார் கூறுகையில், ‘‘தண்ணீர் பாட்டில் விற்பனையான ரூ.2 லட்சத்து 70 ஆயிரத்து 800 வங்கியில் செலுத்தாமல் இருந்தது, ஆண்டு தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட கேஷியரிடம் விசாரணை நடத்தியதில் ரூ.1 லட்சம் திருப்பி செலுத்தியுள்ளார். மீதி தொகையை விரைவில் செலுத்துவதாக உறுதியளித்துள்ளார்’’ என்றார்.

வாரிசு வேலை

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றிய ராஜாத்தியின் தந்தை தற்கொலை செய்து கொண்டார். வாரிசு அடிப்படையில் ராஜாத்திக்கு அரசு வேலை வழங்கப்பட்டது. சின்ன வயதிலேயே வேலைக்கு சேர்ந்துள்ளதால், பல உயர்பதவிகளை அடைய வேண்டிய நிலையில் பணத்தை கையாடல் செய்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


Tags : Ramanathapuram , ramnathapuram , amma water, money , bank
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...