×

குழந்தைகள் விற்பனை வழக்கு நர்ஸ் தம்பியிடம் 5 நாள் விசாரணை முடிந்தது: 6ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு

நாமக்கல்:  நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், சட்ட விரோதமாக குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் நர்ஸ் அமுதவள்ளி, கணவர் ரவிச்சந்திரன், அரசு  மருத்துவமனை டிரைவர் முருகேசன், புரோக்கர்கள் அருள்சாமி, பெங்களூருவை சேர்ந்த அழகுகலை நிபுணர் ரேகா உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில் 7 பேர் நீதிமன்றங்களில் ஜாமீன் கேட்டு, தாக்கல் செய்த மனு  தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இந்த நிலையில், இவ்வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த நர்ஸ் அமுதவள்ளியின் தம்பி நந்தகுமார்(42), கடந்த 16ம் தேதி திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை  நடத்தினர்.

டிஎஸ்பி கிருஷ்ணன் தலைமையிலான விசாரணை குழுவினர், நந்தகுமாரை கடந்த 5 நாட்களாக சேலத்தில் வைத்து விசாரித்தனர். அப்போது, நர்ஸ் அமுதவள்ளி மூலம் பெறப்பட்ட குழந்தைகள் தமிழகத்தில் எங்கெல்லாம் விற்பனை  செய்யப்பட்டது. கடந்த 2 ஆண்டுக்குள் எத்தனை குழந்தைகள் சட்டவிரோதமாக கொல்லிமலையில் இருந்து கொண்டு செல்லப்பட்டன என்பது போன்ற கேள்விகளை கேட்டு அதற்கு பதில் பெற்றனர். 5 நாள் விசாரணை முடிந்ததையடுத்து, நேற்று நந்தகுமாரை நாமக்கல் முதலாவது குற்றவியல் நீதிமன்ற நடுவர் வடிவேல் முன்னிலையில் அவரது வீட்டில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து வரும் 6ம் தேதி வரை நந்தகுமாரை சிறையில்  அடைக்கும்படி, நீதிபதி உத்தரவிட்டார்.




Tags : trial ,sales nurse couple ,children ,jail , Children, sales , nurse, jail ,6th
× RELATED பாரத் பயோடெக் நிறுவனம் தகவல் இந்தியாவில் காசநோய் தடுப்பூசி பரிசோதனை