பாஜவில் இணைந்த ஜோதிடர் கழுத்தறுத்து படுகொலை: கோவையில் பயங்கரம்

தொண்டாமுத்தூர்: கோவையில் குடியரசு கட்சியில் இருந்து விலகி பாஜகவில்  சேர்ந்த ஜோதிடர் கழுத்தறுத்து கொல்லப்பட்டார். கோவை ஆர்.எஸ்.புரம் அருகே குமாரசாமி காலனி பகுதியை சேர்ந்த ரத்னவேல் மகன் சந்தோஷ்குமார் (26). ஜோதிடரான இவர் பரிகார பூஜைகளும் நடத்தி வந்தார். திருமணம் ஆகாதவர். இந்திய குடியரசு கட்சியில் உறுப்பினராக இருந்தார்.   சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து விட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக சந்தோஷ்குமாருக்கும், சிலருக்கும் தகராறு இருந்துள்ளது. நேற்று மதியம் இவர் வீட்டிற்கு ஆறுமுகம், குண்டு ரமேஷ், செந்தில்,  கருண் ஆகியோர் சென்று மீண்டும் குடியரசு கட்சியில் சேரவேண்டும் என நிர்பந்தம் செய்துள்ளனர். இதை சந்தோஷ்குமார் ஏற்க மறுக்கவே கொலை செய்வதாக மிரட்டல் விடுத்தனர்.

இது தொடர்பாக சந்தோஷ்குமார், அவரது தாய் பிரேமா, தங்கை ஆகியோர் ஆர்.எஸ்.புரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். போலீசார் எந்த விசாரணையும் நடத்தவில்லை. இந்நிலையில், நேற்று மாலை சந்தோஷ்குமார், வீரகேரளம் பஸ்  ஸ்டாப் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக 2 பைக்கில் வந்த 4 பேர் சந்தோஷ்குமாரிடம் வாக்குவாதம் செய்து, திடீரென கத்தியால் சந்தோஷ்குமாரின் கழுத்தை அறுத்தனர். சம்பவ இடத்திலேயே அவர் சரிந்துவிழுந்து  இறந்தார். பொதுமக்கள் முன்னிலையில் ஜோதிடர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வடவள்ளி போலீசார் வழக்கு பதிந்து 4 பேரை தேடி வருகின்றனர்.× RELATED தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து...