ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு எண்ணெய் நிறுவன பிளான்ட் முன் ஆர்ப்பாட்டம்: கோட்டூர் அருகே விவசாயிகள் கொந்தளிப்பு

மன்னார்குடி: ஹைட்ரோ கார்பன்  திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து  கோட்டூர்  அருகே எண்ணெய் நிறுவன பிளான்ட் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்  நடத்தினர்.  தமிழகத்தில் நாகை, திருவாரூர், விழுப்புரம், கடலூர்  மற்றும் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் ஆகிய இடங்களில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா குழுமத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இத்திட்டம்  செயல்படுத்தப்பட்டால், காவிரி டெல்டாவில் விவசாயம்  முற்றிலும் அழிந்து விடும், நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்படும்,  குடிநீருக்கு பஞ்சம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதனால் இத்திட்டத்தை  செயல்படுத்த விவசாயிகள் எதிர்த்து  வருகின்றனர். இந்த  திட்டத்தை கைவிடக்கோரியும், மத்திய அரசை கண்டித்தும் காவிரி டெல்டா  மாவட்டங்களில் தொடர்ந்து 9  நாட்கள் பல்வேறு போராட்டங்கள் நடந்தது. மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு  எண்ணிக்கையையொட்டி  கடந்த 3 நாட்களாக போராட்டம் எதுவும் நடைபெறவில்லை. நேற்று மீண்டும் போராட்டம் தொடர்ந்தது.

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் அக்கரை கோட்டகம்  ஊராட்சி சந்தனநல்லூர் கிராமத்தில் 18 வருடமாக எண்ணெய்  எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில்  பூமியில் புதைக்கப்பட்ட குழாய்கள் பயன்பாடின்றி உள்ளது. இந்த  குழாய்களை  ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு பயன்படுத்த வாய்ப்புள்ளது என்று இப்பகுதி  மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே, எண்ணெய் நிறுவனம் இந்த பகுதியில்  இருந்து வெளியேற வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட  வேண்டும் ஆகிய  கோரிக்கைகளை வலியுறுத்தி சந்தனநல்லூரில் உள்ள எண்ணெய் நிறுவன பிளான்ட் முன் நேற்று   காலை விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர்.போராட்டம் குறித்து சிபிஎம்எல் மக்கள் விடுதலை இயக்க மாநில அரசியல் குழு  உறுப்பினர் தங்க தமிழ்வேலன் கூறியதாவது: சந்தன நல்லூர் கிராமத்திற்கு அருகே திருக்களார் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இப்பகுதி ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட்டால் சுடுகாடாக மாறும் அபாயம் உள்ளது.  கிராம மக்கள் அனைத்தையும் இழந்து வேறு மாவட்டங்களுக்கு அகதிகளாக செல்ல நேரிடும். எனவே, மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் எடுக்கும் முயற்சியை உடன் கைவிட வேண்டும், தமிழக அரசும் தனது தூக்கத்தை கலைத்து டெல்டா  விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு தடை விதித்து  விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இதில் மத்திய மாநில அரசுகள் மெத்தனம் காட்டினால் போராட்டம் தீவிரமாக இருக்கும்.  இவ்வாறு அவர் கூறினார்.

கெயில் நிறுவனத்தினரை கைது செய்ய வேண்டும்

மயிலாடுதுறை மற்றும் சுற்றியுள்ள  பகுதிகளில் விளை நிலத்தில் கச்சா எண்ணெய் கொண்டு செல்ல கெயில் நிறுவனம் சார்பில்  குழாய் பதிக்க முயன்றதால், அதை எதிர்த்து உமையாள்புரத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.  போராட்டத்தில் நிலம், நீர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் இரணியன்  கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு ஜாமீனில் விடுதலையானார். இதுபற்றி, அவர் கூறுகையில்,  `உமையாள்புரம் கிராமத்தில் குழாய் பதிப்பதை எதிர்த்தும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்தும் போராட்டம் நடைபெற உள்ளது. தமிழக அரசு முதற்கட்டமாக கெயில் நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளிடமிருந்து புகார்களை பெற்று  வழக்குப் போட்டு கெயில் நிறுவனத்தினரை கைது செய்ய வேண்டும்’ என்றார்.

Related Stories:

>