×

திருவொற்றியூரில் துப்புரவு பணிகள் சுணக்கம் தெருக்களில் குப்பை தேங்கி சுகாதார கேடு

திருவொற்றியூர்:  திருவொற்றியூர் மண்டலத்தில் துப்புரவு பணிகள் முறையாக நடைபெறாததால், தெருக்களில் குப்பை தேங்கியுள்ளது. இதனால், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்தில் 14 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் தினசரி தேங்கும் குப்பை கழிவுகள் துப்புரவு பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு, பின்னர் லாரிகள் மூலம் ராஜாஜி நகர் அருகே உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கிற்கு எடுத்து செல்லப்படுகிறது. குப்பைகளை சேகரிக்கும் பணியில் சுமார் 220 நிரந்தர துப்புரவு பணியாளர்கள், 850 ஒப்பந்த பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சமீப காலமாக துப்புரவு பணியாளர்கள் சரிவர பணியில் ஈடுபடாததால் பல இடங்களில் குப்பை தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

குறிப்பாக 12வது வார்டுக்குட்பட்ட புது தெரு, திலகர் நகர் முதல் தெரு ஆகிய பகுதி தெருக்களில் குப்பை குவிந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நாய், ஆடு, மாடுகள் போன்றவை இந்த குப்பையில் உள்ள உணவு கழிவுகளை தின்பதற்காக அவற்றை கிளறுவதால், சாலை முழுவதும் குப்பை சிதறி கிடக்கிறது. மேலும், உணவு கழிவுகளை சாப்பிடும் போட்டியில் நாய்கள் மற்றும் மாடுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு, திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே, குப்பையை தினசரி முறையாக அகற்ற வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலமுறை திருவொற்றியூர் மண்டல அதிகாரிகளுக்கு பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,  ‘‘திருவொற்றியூர் மண்டலம் 12வது வார்டில் குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை. குப்பைகளை சேகரிக்க ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள தொட்டிகள் உடைந்து கிடப்பதால், குப்பை சாலையில் சிதறுகிறது.

அவ்வாறு கொட்டப்படும் குப்பைகளை ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் முறையாக அகற்றுவது கிடையாது. இதனால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. ஆனால் துப்புரவு பணியாளர்கள் பணிக்கு வந்ததாகவும், குப்பைத் தொட்டிகளை பராமரிப்பதாகவும் கணக்கு எழுதி அதிகாரிகள் முறைகேடு செய்கிறார்கள். இதற்கு சுகாதார பிரிவு, பொறியியல் பிரிவு அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். எனவே, இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : Cleaning ,streets ,Thiruvottiyur , In Thiruvottiyur, sanitation works, Health hazard
× RELATED சென்னையில் நாளை திறந்த வெளி வேனில்...