×

அமேதியில் வெற்றிக்காக உழைத்த ஸ்மிருதி இரானி உதவியாளர் நள்ளிரவில் சுட்டுக்கொலை

அமேதி: ஸ்மிருதி இரானியின் வெற்றிக்காக பணியாற்றிய அவரது உதவியாளர், நள்ளிரவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். உத்தரப் பிரதேசத்தில் அமேதி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜ சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி போட்டியிட்டார். கடந்த 2014ம் ஆண்டு இதே தொகுதியில் ராகுலிடம் தோற்ற போதிலும் இந்த தேர்தலில் ஸ்மிருதி வெற்றி பெற்றார். தேர்தலுக்கு முன்பாக பராலியா பகுதியில் உள்ள மக்களுக்கு ஸ்மிருதி காலணிகளை பரிசாக கொடுத்தார். இந்த காலணிகளை கிராம மக்களுக்கு விநியோகம் செய்ய உதவியவர் முன்னாள் கிராம தலைவரான சுரேந்திர சிங் (50). இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு தனது வீடு அருகே 2 மர்ம நபர்களால் சுரேந்திர சிங் சுட்டப்பட்டதில் பரிதாபமாக இறந்தார். அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வெற்றி பெற்ற நிலையில் அவருக்கு உதவியாளராக இருந்த சுரேந்திர சிங் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து மாநில டிஜிபி ஓம் பிரகாஷ் சிங் கூறுகையில், “முன் விரோதம் காரணமாக சுரேந்திர சிங் கொல்லப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அரசியல் விரோதத்தால் அவர் கொல்லப்பட்டாரா எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்ட விசாரணையில் பல்வேறு தடயங்கள் கிடைத்துள்ளன. 7 பேர் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர். அடுத்த 12 மணி நேரத்தில் குற்றவாளியை பிடித்து விடுவோம்,” என்றார். சுரேந்திர சிங் கொல்லப்பட்டதற்கு உபி துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா இரங்கல் தெரிவித்துள்ளார்.  ‘‘கட்சியின் தொண்டர் கொல்லப்பட்டது மிகவும் வருத்தமளிக்கிறது மற்றும் துரதிருஷ்டவசமானது. அவர் கடினமாக பணியாற்றக்கூடியவர். அவரை கொன்றுவிட்டு பதுங்கியிருந்தவர்கள் பிடிபட்டுள்ளனர்.  ஒட்டு மொத்த அமேதியே சோகத்தில் மூழ்கி இருக்கிறது,” என்றார். அமேதி மாவட்ட பொறுப்பு அமைச்சர் மோசின் ரசா, கொல்லப்பட்ட சிங் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினார்.

Tags : assistant ,Smriti Irani ,Amethi , Ameti, Smriti Irani, assistant, shot dead
× RELATED சென்னையில் நாளை வாக்கு சேகரிக்கிறார் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இராணி..!!