ஒரு நல்ல தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ள பி.எம்.மோடி திரைப்படத்தை ராகுல் காந்தி பார்க்க வேண்டும்: நடிகர் விவேக் ஓபராய் அட்வைஸ்

மும்பை: ஒரு நல்ல அரசியல் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ‘பி.எம். மோடி’ திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்று நடிகர் விவேக் ஓபராய் கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் சுயசரிதையை  கருவாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள ‘பி.எம். மோடி’ திரைப்படத்தில் விவேக் ஓபராய், நரேந்திர மோடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாக இருந்தது. ஆனால், மக்களவைத் தேர்தல் காரணமாக ஏப்ரல் மாதம் திரைப்படத்தை வெளியிட சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. இதனால், தேர்தல் முடிந்ததை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமையன்று  ‘பி.எம். மோடி’ திரைப்படம் வெளியானது. இந்த நிலையில் மராத்தி செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த விவேக் ஓபராய் கூறியதாவது; பிரதமர் நரேந்திர மோடி மிகவும் மரியாதைக்குரிய ஒரு தலைவர். அவரது கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை பெருமையாக கருதுகிறேன். ஒரு நல்ல அரசியல் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ள  ‘பி.எம். மோடி’ திரைப்படத்தை பார்க்குமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கேட்டுக் கொள்கிறேன். இந்த படத்தில் நடிப்பதற்காக நான் சம்பளம் ஏதும் வாங்கவில்லை. பிரதமர் மோடி மீதான மரியாதைக்காகவே இந்த படத்தில் நடித்து கொடுத்தேன்.

இந்த படத்துக்காக நான் கடுமையாக உழைத்திருக்கிறேன். சுமார் 5 மாதங்களில் பாதி நாட்கள் மோடியுடன் கழித்திருக்கிறேன். அவரை பின்பற்றி தினசரி தியானம் செய்வதை வழக்கமாக்கி கொண்டுள்ளேன். மோடியின் ஒவ்வொரு நடவடிக்கைகள் மற்றும் அவரது மேனரிசங்களை பார்த்து பார்த்து இந்த படத்தில் நான் நடித்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். திரைப்படத்தில் பிரதமர் மோடியின் திருமண வாழ்க்கை பற்றிய காட்சிகள் எதுவும் இடம்பெறாதது குறித்த கேள்விக்கு, ‘‘படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்பு அது பற்றியும் நாங்கள் விவாதித்தோம். ஆனால், இந்த படத்துக்கு அது தேவையற்றது என கருதியதால் அதுபற்றிய காட்சிகள் இடம்பெறவில்லை’’ என்றார். நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேயின் விமர்சனம் குறித்த கேள்விக்கு, ‘‘ராஜ் தாக்கரே கலைஞர்களை மதிப்பவர். அவர் இந்த திரைப்படத்துக்கு எதிராகத்தான் தனது கருத்தைத்தான் தெரிவித்திருந்தார்’’ என்றார்.

Tags : Rahul Gandhi ,Vivek Oberoi Advis , PM MODI, Rahul Gandhi, actor, Vivek Oberoi, Advis...
× RELATED விதவை பெண் பலாத்கார குற்றச்சாட்டில்...