×

தமிழகத்தில் உள்ள நூற்றாண்டு பழமையான 3,496 கோயில்களின் பட்டியல் வெளியீடு: பழமை மாறாமல் புதுப்பிக்க கமிஷனர் அறிவுரை

சென்னை: அறநிலையத்துறையில் நூற்றாண்டு பழமையான 3,496 கோயில்கள் இருப்பதாக பட்டியல் ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 40,190 கோயில்கள் உள்ளன. இதில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதான கோயில்கள் அடக்கம். இதில், ஆயிரக்கணக்கான பழமையான கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் போதுமான  அளவு வருவாய் கிடைப்பதில்லை. இதனால், அந்த கோயில்களில் ஒரு கால பூஜை கூட நடப்பதில்லை. மேலும், அந்த கோயில்களை அறநிலையத்துறை கைவிட்டதால், அங்கு பராமரிப்பு பணி கூட மேற்கொள்ளப்படாமல் இருந்தது. இதனால்,  தமிழகம் முழுவதும் பெரும்பாலான பழமையான கோயில்கள் சிதிலமடைந்த நிலையில் தான் உள்ளதாக கூறப்படுகிறது. சில இடங்களில் கோயில்களில் தூண்கள் இடிந்து விழுந்தும், அந்த கோயிலுக்குள் செல்ல முடியாத நிலை தான்  ஏற்பட்டுள்ளது. மேலும், ஒரு சில இடங்களில் பழமையான கோயில்கள் இருந்த இடங்கள் கூட தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த கோயில்கள் தனியார் ஆக்கிரமித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அறநிலையத்துறைக்கு  ஏராளமான இந்து அமைப்புகள், பக்தர்கள் புகார்கள் தெரிவித்தனர். மேலும், பழமையான கோயிலைக்காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் ேகாரிக்கை விடுத்தனர்.

இதை தொடர்ந்து நூற்றாண்டுக்குமேல் பழமையான கோயில்களை கணக்கெடுக்க அறநிலையத்துறை முடிவு செய்தது. இதை தொடர்ந்து அனைத்து மண்டல இணை ஆணையர் தலைமையிலான குழுவினர் பழமையான கோயில்கள் தொடர்பாக  கணக்கெடுத்து, அறநிலையத்துறை தலைமை அலுவலகத்தில் பட்டியல் ஒன்றை ஒப்படைத்துள்ளனர். அதன்படி 3,496 நூற்றாண்டு பழமையான கோயில்கள் உள்ளன என்று அறநிலையத்துறையிடம் அனைத்து மண்டல இணை ஆணையர்கள்  பட்டியல் விவரங்களை அளித்துள்ளனர். குறிப்பாக, சிவநல்லூர் வரதுங்கவிநாயகர் திருக்கோயில், இலத்தூர் பேச்சியம்மன் கோயில், ஆயகுடி லட்சுமண நாராயண பெருமாள் கோயில், கிளாங்காடு சொக்கலிங்கநாதர் கோயில், சாம்பவார் வடகரை  நீலிகண்டியம்மன் கோயில், பத்திரகாளியம்மன் கோயில், பால மார்த்தண்டபுரம் முப்பிடாரியம்மன் கோயில், நாகர்கோவில் நாகராஜா கோயில், அயன்புரம் நாராயணியம்மன்கோயில், பல்லாவரம் சீனிவாசபெருமாள் கோயில், பம்மல்  அர்க்கீஸ்வரர்கோயில், மயிலாப்பூர் வாலீஸ்வரர் கோயில், திருமுல்லைவாயல் மாசிலாமணீஸ்வரர் கோயில் உள்ளிட்ட கோயில்கள் அடக்கம். இந்த நூற்றாண்டு பழமையான கோயில்களில் இனி வருங்காலங்களில் பராமரிப்பு பணி  மேற்கொள்ளவும், கோயில்களை பழமை மாறாமல் புதுப்பிக்கவும் அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. தற்போது இது போன்ற பழமையான கோயில்களுக்கு தான் முன்னுரிமை அடிப்படையில் திருப்பணிக்கான ஒப்புதல்  அறநிலையத்துறை  தலைமை வழங்கி வருகிறது என்று அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : temples ,Tamil Nadu , Centuries old ,Tamil Nadu,temples
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு