×

புஷ்கர விழா கொண்டாடிய 7 மாதத்தில் எங்கும் அமலைச் செடிகளாக காட்சியளிக்கும் தாமிரபரணி: கடும் வறட்சியால் குளிப்பதற்கும் தகுதியற்றதாக மாறியது

நெல்லை: தமிழகத்தின் வற்றாத ஜீவநதி எனப் பெயர் பெற்ற தாமிரபரணியில் ஆண்டுமுழுவதும் தண்ணீர் ஒடுகிறது. எந்த கோடையிலும் தாமிரபரணி தண்ணீர் செல்வது தனிச்சிறப்பாகும். 144 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்  தாமிரபரணி நதிக்கு மஹாபுஷ்கர விழா கொண்டாடப்பட்டது. 12 நாட்கள் நடந்த இந்த விழாவின் போது தாமிரபரணியில் நீர் அதிகமாக பெருக்கெடுத்து ஓடியது. அப்போது தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில்  வசிக்கும் நெல்லை மாவட்டத்தினரும் வந்து நீராடிச் சென்றனர்.12 நாட்களும் தாமிரபரணிக்கு சிறப்பு ஆரத்தி பூஜைகளும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடந்தன. பல்வேறு தீர்த்த கட்டங்கள் புதுப்பிக்கப்பட்டன. கவர்னர் உள்ளிட்ட பிரமுகர்களும் விழா நாட்களில் கலந்து கொண்டனர்.

பல இடங்களில் நதிக்கரை சீரமைக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த நிலையில் இந்த கோடையில் எதிர்பாராத வகையில் கடும் வறட்சி நிலவி வருகிறது. அணைகள் வறண்டதால் தாமிரபரணியில் மிகக்குறைந்த  அளவிலேயே நீர் திறக்கப்படுகிறது. இதனால் அகன்ற தாமிரபரணி நீர் செல்லும் பாதை முழுவதும் சுருங்கி நீரோடை போல் மாறிவிட்டது. சில இடங்களில் தண்ணீர் ஓட்டமின்றி தேங்கிய நிலையில் உள்ளது. அதுவும் கலங்கலாக உள்ளது. இந்த நீரில் அமலை செடிகள் அதிவேகமாக வளர்ந்து படர்ந்து வருகிறது. இருக்கிற நீரும் கண்களுக்கு தெரியாத அளவிற்கு அமலை வளர்ந்துள்ளதால், குளிப்பதற்கு தகுதியற்ற நிலைக்கு தாமிரபரணி சென்றுவிட்டது. பொதுமக்கள்  தாமிரபரணியில் துணிகளை துவைப்பதையும் குறைத்துவிட்டனர். இங்கிருந்து நீரேற்று நிலையங்கள் மூலம் சுத்திகரிப்பு செய்து வழங்கப்படும் குடிநீரும் கலங்கலாகவே உள்ளது. தாமிரபரணியின் இந்த பரிதாப காட்சி நீர்நிலை ஆர்வலர்களை கவலையடையச் செய்துள்ளது.

Tags : Tamaraparani ,festival ,everywhere ,Pushkara , Pushkara ceremony, Thamiraparani, severe drought
× RELATED கொரோனாவை பொருட்படுத்தாமல்...