×

உத்தரபிரதேசத்தில் மத்தியமைச்சர் ஸ்மிருதி இரானியின் உதவியாளர் சுட்டுக்கொலை: அதிகாலையில் வீட்டில் படுத்திருந்த போது பயங்கரம்

அமேதி: அமேதி தொகுதிக்கு உட்பட்ட முன்னாள் பஞ்சாயத்து தலைவரும், ஸ்மிருதி இரானியின் உதவியாளருமான சுரேந்தர் சிங், இன்று அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டார். இவர், தேர்தலில் வாக்காளர்களுக்கு காலணி சப்ளை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.  உத்தரபிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்துக்கு உட்பட்ட பராவுலியா கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேந்தர் சிங் (50). இவர், பராவுலியா பஞ்சாயத்தின் முன்னாள் தலைவர். அமேதி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியை எதிர்த்து போட்டியிட்டு ெவன்ற மத்திய அமைச்சரும், பாஜ வேட்பாளருமான ஸ்மிருதி இரானியின் உதவியாளராகவும் இருந்துள்ளார். தேர்தல் நேரங்களில் ஸ்மிருதி இரானிக்கு உதவியாக பிரசாரங்களில் ஈடுபட்டார். இந்நிலையில், இன்று அதிகாலை சுரேந்தர் சிங் அவரது வீட்டில் படுத்திருந்த போது, அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் வீட்டினுள் புகுந்து, அவரை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிவிட்டனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சுரேந்தர் சிங்கை அக்கம்பக்கத்தினர் மீட்டு, லக்ேனா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பராவுலியா கிராமம் ஜாமோ காவல் நிலைய எல்லையில் வருவதால், சுரேந்தர் சிங் கொலை குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து ேபாலீஸ் டிஎஸ்பி தயா ராம் கூறுகையில், ‘சுரேந்தர் சிங், வெளியூர் சென்றுவிட்டு நேற்றிரவு 11.30 மணிக்கு வீடு திரும்பி உள்ளார். வீட்டின் வெளியே படுத்து உறங்கிய போது இன்று அதிகாலை 3 மணிக்கு பைக்கில் வந்த இருவர், அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிவிட்டனர். முன்விரோதத்தால் கொலை நடந்திருக்க வாய்ப்புள்ளது. தொடர் விசாரணை நடக்கிறது’ என்றார்.  ஏற்கனவே, உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில் ராகுல்காந்தியை ஆதரித்து வாக்காளர்களுடன் காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துரையாடினார். அப்போது, ‘‘ஸ்மிருதி இரானி வெளியாள். அவர் அமேதி மக்களுக்கு காலணிகளை வழங்குகிறார். இவ்வாறு செய்வதன் மூலமாக ராகுல்காந்தியை அவமதிக்கிறார்.

 ஆனால்  உண்மையில் அமேதி தொகுதி மக்களை அவர் அவமதிக்கிறார்’’ என்று பேசினார். பிரியங்காவின் பேச்சுக்கு பின்னால், சுட்டுக் கொல்லப்பட்ட சுரேந்தர் சிங், வாக்காளர்களுக்கு காலணி வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கோவா மாநில பாஜ முன்னாள் முதல்வர் மனோகர் பரிக்கர், பராவுலியா கிராமத்தை 2015ம் ஆண்டு தத்தெடுத்து ரூ.15 கோடி அளவிற்கு பல்வேறு நலத்திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளார். இந்த நிதி அளிக்கப்பட்ட விஷயத்தில் சுரேந்தர் சிங்குக்கு முக்கிய தொடர்பு இருந்துள்ளது. இதுதொடர்பாக, அவர் மீது சில புகார்கள் கூறப்பட்டதாக, கிராம மக்கள் தெரிவித்தனர். அதனால், சுரேந்தர் சிங் கொலை, அரசியல் படுகொலையா அல்லது முன்விரோத கொலையா என்பது போன்ற கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படும் இந்த அமேதி தொகுதியில், கடந்த 2004ம் ஆண்டு முதல் வெற்றி பெற்று வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, இந்த தேர்தலில் 55,120 வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்மிருதி இரானி ேதாற்கடித்தார். இதற்கு முக்கிய காரணமாக இருந்த அமேதி தொகுதியின் பாஜ பொறுப்பாளர்களில் ஒருவராகவும், ஸ்மிருதி இரானியின் உதவியாளராகவும் இருந்த சுரேந்தர் சிங் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவ்விவகாரத்தில், சந்தேகத்துக்கு இடமான 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்துக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கண்டனம் தெரிவித்துள்ளார்.


Tags : Smriti Irani ,assistant ,Uttar Pradesh , Assistant to Uttar Pradesh Chief Minister Smriti Irani, shot dead, early morning, terror
× RELATED அமேதி வளர்ச்சியடையவில்லை: தொகுதி...