×

சென்னை புறநகர், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து இலவச ரேஷன் அரிசியை மாவாக்கி நூதன முறையில் கடத்தல்: ஆந்திர, கர்நாடக ஓட்டல்களில் புட்டு, இடியாப்பம் தயாரிக்க சப்ளை

சென்னை: ஆந்திர மாநிலத்தில் குழாய் புட்டு, இடியாப்பம் சமைக்க சென்னை புறநகர், திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து இலவச ரேஷன் அரிசியை மாவாக்கி கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை, உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டும்காணாமல் இருப்பதாக கூறப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டம் ஆந்திர மாநில எல்லையில் உள்ளது. இதை சாதகமாக பயன்படுத்தும் கடத்தல்காரர்கள், ஆட்டோ, வேன், மினி லாரி, லாரி உள்ளிட்ட வாகனங்களில் ரேஷன் அரிசியை சர்வ சாதாரணமாக கடத்திச் செல்கின்றனர். சிலர், புறநகர் ரயில்கள் மூலமும் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு, பிடிபடும் நபர்கள், குறைந்தபட்ச தண்டனையை அனுபவிக்கின்றனர். சிலர் முன்ஜாமின் பெற்றுவிடுகின்றனர். சரியான ஆதாரங்களை போலீசாரும், அதிகாரிகளும் நிரூபித்தால் மட்டுமே, தண்டனை கிடைக்கிறது. இல்லாத பட்சத்தில், கடத்தல்காரர்கள் எளிதில் தப்பி விடுகின்றனர். இந்நிலையில், அரிசி கடத்தலை மட்டுமே அதிகாரிகள் கண்காணிப்பதால், தற்போது நூதன முறையில், இலவச ரேஷன் அரிசியை மாவாக மாற்றி கடத்தும் பணியில் பலர் ஈடுபட்டுள்ளனர். வெளி மார்க்கெட்டில் தற்போது பச்சரிசி கிலோ ₹50 வரை விற்கப்பட்டு வருகிறது. இதை வாங்கி, பதப்படுத்தி, கூலி கொடுத்து அரைத்து மாவாக்கி விற்பனை செய்யும்போது, விலை ₹75 முதல் 100 வரை ஆகிவிடுகிறது.
 
அதனால், ஆந்திர வியாபாரிகள் ரேஷன் அரிசியை சென்னை புறநகர் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து கடத்துவதற்கு பதிலாக, மாவாக மாற்றி, சாக்கு மூட்டைகளில் எளிதாக கடத்துகின்றனர். சாக்கு மூட்டைகளில் வரும் மாவை, அவர்கள் குழாய் புட்டு மற்றும் இடியாப்பம் தயாரிக்க பயன்படுத்தி ஓட்டலில் விற்பனை செய்கின்றனர். அரிசியாக கடத்தினால் எளிதாக பிடித்து விடுகின்றனர் என்பதால், மாவாக மாற்றி கடத்துகின்றனர். இதை, உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் கண்டும், காணாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இனியாவது, அரிசியை மட்டுமே பிடித்து வந்த இவர்கள், அரிசி மாவுகளை கடத்திச் செல்லும் வாகனங்களையும் பிடித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்நடவடிக்கை தொடர்ந்தால், கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். இதுகுறித்து குடிமைப்பொருள் வழங்கல் அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘’ரேஷன் அரிசி கடத்துவதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம். தற்போது அரிசியை மாவாக்கி கடத்துவதாக தகவல் வந்துள்ளது. இனி அதையும் விடமாட்டோம். அதை கண்டுபிடிக்க அறிவியல் பூர்வமான வழிகளை கண்டுபிடித்து பின்பற்ற உள்ளோம். ரேஷன் அரிசியை, மாவாக மாற்றுவதற்கு உதவிய ரேஷன் கடைக்காரர்கள், எடை அளவையர்களை கண்டறியும் பணி நடக்கிறது. இது தவிர, மாவட்டம் முழுக்க உள்ள ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்படும். அரிசி கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் ரேஷன் கடை பணியாளர்கள், சஸ்பெண்ட் செய்யப்படுவர்’’ என்றார்.

குடோன்களில் இருப்பு கண்காணிக்கப்படுமா?

சிவில் சப்ளையில் இப்போது எல்லாம் ஆன்-லைன்தான்.  இதனால் குடோன் ஸ்டாக், மற்றும் ரேஷன் கடை ஸ்டாக் ஒரே அளவாக இருக்கவேண்டும்.  ஆனால் ரேஷன் கடை அளவு சரியாக இருக்கும், குடோன் அளவு எப்போதுமே ஆன்லைனில் மட்டுமே சரியாக இருக்கும். குடோனில் யார் கேட்கப் போகிறார்கள் பார்க்கப் போகிறார்கள் என்ற தைரியம் இதற்கு காரணம். மேலும் ஒரு மூட்டைக்கு ஒரு கிலோ வீதம் எடுக்கப்படும் ரேஷன் அரிசியை, பில் கிளர்க்குகள் மூலம் போலி பில் தயாரித்து, நுகர் பொருள் வாணிப கழகத்தில் இருந்து வெளியே எடுத்துச் சென்று, ரேஷன் கடைகளுக்கு வழங்கியது போல் கணக்கு எழுதி, அதிகாரிகள் ஆசியுடன் ஆந்திர, கர்நாடக மாநிலத்துக்கு கடத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
எனவே, குடோன்களில் திடீர் ஆய்வு செய்து இருப்பை கண்காணிக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்பாவி பெண்கள், தொழிலாளர்களை உள்ளே தள்ளும் புட் செல் போலீசார்

அரசு வழங்கும் 20 கிலோ அரிசி போதாததால், தங்களது வீட்டுத் தேவைக்காக இலவச அரிசியை ஏழை பெண்கள் கிலோ ₹4க்கு வாங்குகின்றனர். இந்த அரிசியும் கிடைக்காததால் நகர்ப்புறங்களுக்கு சென்று, வீடு வீடாக பணம் கொடுத்து, 20 மற்றும் 25 கிலோ பைகளில் அரிசி வாங்கி ரயில் மூலம் தங்களது இருப்பிடங்களுக்கு செல்கின்றனர். அவர்களை ஆங்காங்கே உள்ள ரயில் நிலையங்களில் மடக்கி பிடிக்கும் ‘’புட் செல்’’ போலீசார், ரேஷன் அரிசி கடத்தியதாக வழக்குப்பதிந்து சிறையில் அடைக்கின்றனர். ஆனால், டன் கணக்கில் லாரிகளில் ரேஷன் அரிசியை மாவாக்கி கடத்திச் செல்லும் புள்ளிகளை மட்டும் வருமானம் கருதி கண்டும், காணாமல் உள்ளனர். இனியாவது, மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவில் நேர்மையான அதிகாரிகளை நியமித்து, முறையாக கடத்தலை தடுக்க உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : suburbs ,districts ,Madras Chennai ,Tiruvallur ,hotels ,Andhra ,Karnataka ,Pudu , Chennai, Suburban, Tiruvallur, Ration Rice
× RELATED தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் இரவு 7...