×

சாரல், கனமழை எதிரொலி குமரியில் ரப்பர் பால்வடிக்கும் தொழில் தீவிரம்

குலசேகரம்: குமரி  மாவட்டத்தில் பொருளாதாரத்தை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது  ரப்பர். இந்த மாவட்டத்தில் கல்குளம், விளவங்கோடு, திருவட்டார், தோவாளை  போன்ற தாலுகாக்களில் ரப்பர் அதிக அளவில் உள்ளது. சிறு, குறு ரப்பர்  தோட்டங்கள், தனியார் ரப்பர் எஸ்டேட்டுகள், அரசு ரப்பர் கழகத்திற்கு சொந்தமான  எஸ்டேட்டுகள் என ரப்பர் மரங்கள் நிறைந்து உள்ளன. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 2 லட்சம் தொழிலாளர்களுக்கு  வேலை வாய்ப்பு கிடைக்கிறது. நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகியவை குளிர்காலமாக  இருப்பதால் ரப்பர் மூலம் அதிகளவு வருவாய் கிடைக்கும்.

டிசம்பர், ஜனவரி மாதங்களில்  குளிர்காலத்தில் இலை உதிர்வதையடுத்து மார்ச் மாதத்தில் பால்வடிக்கும்  தொழில் நிறுத்தப்படும். அதன்பின்னர் 2 மாதங்கள் (ஏப்ரல், மே) பால்வெட்டு  பணிகள் நடைபெறாது. உதிர்ந்த ரப்பர் மரங்களில் இலைகள் துளிர்விட்ட பின்னர்  மழை பெய்வதை கணக்கில் கொண்டு பணிகள் தொடங்கும். ஒவ்வொரு ஆண்டும்  கோடை மழை அதிகமாக பெய்யும் காலங்களில் முன்னதாகவே பால்வெட்டு பணிகள்  துவங்கும். இந்த ஆண்டு பெரிய அளவில் கோடை மழை இல்லாததால் அரசு ரப்பர் கழகம்  மற்றும் பெரிய ரப்பர் எஸ்டேட்டுகளில் மட்டும் 2 மாத கால இடைவேளைக்கு  பின்னர் சில வாரங்களுக்கு முன் பால்வடிக்கும் தொழில் தொடங்கியது.

இந்தநிலையில்  கடந்த சில நாட்களாக மலையோர பகுதிகள் மற்றும் மாவட்டத்தின் எல்லா  பகுதிகளிலும் கனமழை, சாரல் மழை என விட்டு விட்டு பெய்து வருகிறது. இது  ரப்பர் பால் வெட்டுவதற்கு உகந்த காலநிலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தற்போது ரப்பர் பால் வெட்டும் பணி எல்லா இடங்களிலும் துவங்கப்பட்டு பால்வெட்டு தொழில் தீவிரமடைந்துள்ளது. கடந்த  சில  ஆண்டுகளாக ரப்பருக்கு போதிய வருவாய் இல்லாமல் தரம்பிரிக்காத சாதாரண ரப்பர் கிேலா  ஒன்றுக்கு ரூ.100க்கும் குறைவாக இருந்தது.

இதனால் விவசாயிகள் பெரும்  நஷ்டத்தை சந்தித்தனர்.  இந்தநிலையில் சர்வதேச மார்க்கெட்டில் ரப்பர் விலை உயர  தொடங்கியதை அடுத்து இந்தியாவில் ரப்பர் விலை உயர்ந்து தற்போது ரூ.125ஐ  கடந்துள்ளது. இதுரப்பர் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. இதனால் துவண்டு இருந்த ரப்பர் தோட்ட தொழிலாளர்கள்  ரப்பர் பால் வெட்டும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Tags : rain echo boom , Shrub, heavy rain, Kumari, rubber milk, industry
× RELATED “வீழட்டும் பாசிசம், வெல்லட்டும்...