×

கர்நாடகாவில் ஆபரேஷன் தாமரையால் கலக்கம் ஆட்சியை காப்பாற்ற காங்.-மஜத முயற்சி: தலைவர்கள் தீவிர ஆலோசனை

பெங்களூரு: கர்நாடகாவில் கூட்டணி ஆட்சியை தக்க வைத்து கொள்வதற்கான முயற்சியில்  காங்கிரஸ், மஜத தலைவர்கள் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளனர். கர்நாடகாவில் மக்களவை  தேர்தலில் காங்கிரஸ் - மஜத கூட்டணி தோல்வி அடைந்துள்ளது. மொத்தமுள்ள 28 இடங்களில் 25 இடத்தில் பாஜ  வெற்றி பெற்றுள்ளது. காங்., மஜத கட்சிகள் தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றதால்  முதல்வர் குமாரசாமி மட்டுமின்றி, காங்கிரஸ் தலைவர்களும் கடும் அதிர்ச்சி  அடைந்துள்ளனர்.

இந்த தோல்வியால் கூட்டணி ஆட்சிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற கையோடு, மாநில அரசை கவிழ்க்கும் முயற்சியில் பாஜ ஈடுபடலாம் என இக்கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன. இதனால், ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை முறியடிப்பது குறித்து  முதல்வர் குமாரசாமி, துணை முதல்வர் பரமேஸ்வர், முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்பட மூத்த தலைவர்கள் நேற்று கூடி ஆலோசனை நடத்தினர்.

மஜத-காங்கிரஸ் கூட்டணியை எப்படியாகிலும் கவிழ்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த ஓராண்டு காலமாக பாஜ பல வழிகளில் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. கூட்டணி கட்சியில் உள்ள 20க்கும் மேற்பட்ட எம்எல்ஏ.க்களை ‘ஆபரேஷன் தாமரை’  திட்டத்தில் இழுக்க முயற்சித்தது. இதில் ஒரு எம்எல்ஏ.வை மட்டுமே இழுக்க  முடிந்தது.

கோகாக் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ் ஜாரகிஹோளியை பகடை காயாக  பயன்படுத்தி சில காங்கிரஸ் எம்எல்ஏக்களை இழுப்பதற்கான முயற்சி கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது.மக்களவை தேர்தலில் ஆளும் கூட்டணிக்கு படுதோல்வி கிடைத்துள்ளதால், ரமேசை துருப்பு சீட்டாக பயன்படுத்தி ஆபரேஷன் தாமரை திட்டத்தை தீவிரப்படுத்த பாஜ முடிவு செய்துள்ளது.

தாத்தாவுக்காக ராஜினாமா: பேரன் பிரஜ்வல் அதிரடி
கர்நாடகாவில் நடந்த மக்களவை தேர்தலில் தான் வழக்கமாக போட்டியிடும் ஹாசன் தொகுதியை இம்முறை தனது பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்காக முன்னாள் பிரதமர் தேவகவுடா விட்டுக் கொடுத்தார். பின்னர், அவர் துமகூரு தொகுதியில் மஜத வேட்பாளராக போட்டியிட்டார். இதில் அவர் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.  

இது, அவருடைய கட்சியில் மட்டுமின்றி, குடும்பத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரம், பிரஜ்வல் வெற்றி பெற்றுள்ளார். தாத்தா தனக்காக தோற்றதை தாங்கிக் கொள்ள முடியாத பிரஜ்வல், ‘‘நான் எனது எம்பி பதவியை ராஜினாமா செய்து விட்டு , இடைத்தேர்தலில் தாத்தாவை நிறுத்தி வெற்றி பெறச் செய்வேன்,’’ என்றார். இதை தேவகவுடா ஏற்பாரா? நிராகரிப்பாரா? என்பது தெரியவில்லை.

கண்ணீர் விட்ட மருமகள்:
பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள தேவகவுடா வீட்டிற்கு கணவர் ரேவண்ணாவுடன் வந்த அவரது மருமகள் பவானி, ‘எனது மகன் பிரஜ்வலுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக சொந்த தொகுதியை விட்டு கொடுத்து தும்கூருவில் போட்டியிட்டதால் தானே உங்களுக்கு தோல்வி ஏற்பட்டது. இந்த தவறுக்கு நாங்கள்தான் காரணம். தயவு செய்து எங்களை மன்னித்து விடுங்கள்...’ என்று கண்ணீர் விட்டு அழுதார். அவரை தேவகவுடா சமாதானம் செய்து, ‘‘வாழ்க்கையில் என்ன  நடக்குமோ; அது நடந்தே தீரும்’’ என்று ஆறுதல் கூறினார்.

வாயை திறக்கக் கூடாது:
பெங்களூருவில் முதல்வர் குமாரசாமி தலைமையில் நேற்று அமைச்சர்கள் கூட்டம் நடந்தது. இதில், மக்களவை தேர்தல் தோல்விக்கு பிறகு முதல்வராக நீடிக்க விரும்பவில்லை என்று குமாரசாமி கூறியதை, துணை முதல்வர் பரமேஸ்வர் மற்றும் அமைச்சர்கள் எற்க மறுத்தனர். பின்னர், காங்.- மஜத கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தக் கூடாது என்றும், ஆட்சியை யாரும் விமர்சிக்கக் கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

Tags : Kangarajan ,Majesty ,Telangana ,Operation Lotus ,Karnataka , Karnataka, Operation, Lotus, Stir, Rescue, Kang.-Majatha, Attempt
× RELATED காதலனை திருமணம் செய்து கொண்டதால்...