திருமணத்திற்கு பெண் கேட்டு தராததால் இளம்பெண்ணை காரில் கடத்த முயன்ற கும்பலை மடக்கி பொதுமக்கள் தர்மஅடி: 7 பேர் கைது; மேலும் இருவருக்கு வலை

வாழப்பாடி: சேலம் அருகே, திருமணத்திற்கு பெண் கேட்டு தராததால், இளம்பெண்ணை காரில் கடத்த முயன்ற கும்பலுக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக 7 பேரை கைது செய்த போலீசார், தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே, குறிச்சி ஊராட்சி ரங்கனூர் பகுதியை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண்.

இவரை, கடந்த 6 மாதத்திற்கு முன்பு சேலத்தை சேர்ந்த சிவாமுத்து என்ற வாலிபர் திருமணத்திற்காக பெண் கேட்டு சென்றுள்ளார். இதற்கு பெண்ணின் பெற்றோர் பெண் தர மறுத்துவிட்டனர். மேலும், இளம்பெண்ணுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்து வந்தனர். இதுகுறித்து தகவலறிந்த சிவாமுத்து, நேற்று முன்தினம், தனது நண்பர்கள் 9 பேருடன் ஒரு கார் மற்றும் பைக்கில் ரங்கனூருக்கு வந்து, அந்த பெண்ணின் வீட்டருகே காத்திருந்தனர்.

அப்போது, வீட்டில் இருந்து வெளியே வந்த இளம்பெண்ணின் வாயை பொத்தி, காரில் ஏற்றி கடத்திச் செல்ல முயன்றனர். இதை அப்பகுதியினர் சிலர் பார்த்து, கடத்த வந்த வாலிபர்களை சுற்றி வளைத்தனர். கூட்டம் வந்ததை கண்டதும், சிவாமுத்துவும் மற்றொருவரும் தப்பியோடி விட்டனர். பிடிபட்ட 7 பேருக்கும் பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர்.

பின்னர், வாழப்பாடி போலீசாருக்கு தகவல் கொடுத்து வரவழைத்து, 7 பேரையும் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 6 மாதத்திற்கு முன்பு இளம்பெண்ணை திருமணம் செய்து தரும்படி பெண் கேட்டபோது, அவர்கள் தர மறுத்ததால், அதை மனதில் வைத்துக்கொண்டு பெண்ணை கடத்த முயன்றது தெரியவந்தது.

இதுகுறித்து பெண்ணின் தாய் கொடுத்த புகாரின்பேரில், 7 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தமிழன்(26), கணேசன்(26), சதீஸ்(28), வல்லரசு(23), ஜாபர்அலி(23), ராஜா(30), தினேஷ்(22) ஆகிய 7 பேரை கைது செய்தனர். மேலும், சிவாமுத்துவையும் மற்றொருவரையும் தேடி வருகின்றனர். அவர்கள் வந்த காரையும் பறிமுதல் செய்தனர்.

Tags : gang ,girls , marriage, girl, teenager, kidnapping, arrest
× RELATED சேலத்தில் காவல்நிலையம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி