பாஜ.வை கைவிட்ட சபரிமலை 13 தொகுதியில் டெபாசிட் காலி

திருவனந்தபுரம்: கேரளாவில் சபரிமலை போராட்டத்தை நடத்தியது மூலம் மக்களவை தேர்தலில் வெற்றி பெற நினைத்த பாஜ.வுக்கு, 13 இடங்களில் டெபாசிட் காலியாகி இருக்கிறது. கேரளாவில் நடந்த மக்களவை தேர்தலில் ஆலப்புழா தொகுதியில் போட்டியிட்ட ஷானிமோள் உஸ்மான் தவிர, மற்ற 19 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் பெரும் வெற்றி பெற்றனர்.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் தரிசனத்துக்கு அனுமதிக்கும் விவகாரத்தை பூதாகரமாக்கிய பாஜ. பல்வேறு போராட்டங்களை நடத்தியது. இதன் மூலம், இம்மாநிலத்தில் காலூன்ற நினைத்தது. இம்மாநிலத்தில் திருவனந்தபுரம், பத்தனம்திட்டா மக்களவை தொகுதிகளில் பாஜ வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இம்முறையும் கேரளாவில் எந்த தொகுதியிலும்  பாஜ.வால் வெற்றி பெற முடியவில்லை.
 
திருவனந்தபுரத்தில் மிசோரம் மாநில முன்னாள் கவர்னர் கும்மனம் ராஜசேகரன், பத்தனம்திட்டாவில் சபரிமலை போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட பாஜ மாநில பொது செயலாளர் சுரேந்திரன், எர்ணாகுளம் தொகுதியில் மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணந்தானம், திருச்சூர் தொகுதியில் நடிகரும் மாநிலங்களவை எம்பி.யுமான சுரேஷ் கோபி ஆகியோர் பாஜ.வின் முக்கிய வேட்பாளர்களாக கருதப்பட்டனர். ஆனால், இவர்கள் யாருமே வெற்றி பெறவில்லை. மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணந்தானம், பாஜ கூட்டணி கட்சியான பிடிஜெஎஸ் கட்சி தலைவர் துஷார்வெள்ளாபள்ளி உள்பட 13 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.

விரைவில் இடைத்தேர்தல்:
கேரளாவில் இம்முறை மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி சார்பிலும், இடது முன்னணி கூட்டணி கட்சிகள் சார்பிலும் 9 எம்எல்ஏ.க்கள்  போட்டியிட்டனர். இதில் 4 பேர் வெற்றி  பெற்றுள்ளனர். வட்டியூர்காவு காங்கிரஸ் எம்எல்ஏ முரளிதரன் வடகரை தொகுதியிலும், எர்ணாகுளம்  எம்எல்ஏ ஹைதிஈடன் எர்ணாகுளத்திலும், கோன்னி எம்எல்ஏ அடூர்பிரகாஷ் ஆற்றிங்கல் தொகுதியிலும், அரூர் தொகுதி மார்க்சிஸ்ட் எம்எல்ஏ ஆரிஷ் ஆலப்புழாவிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். இதனால், இந்த 4 பேரும் தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மேலும், சமீபத்தில் பாலா தொகுதி எம்எல்ஏ கே.எம்.மாணி மற்றும் மஞ்சேஸ்வரம் முஸ்லிம்லீக் எம்எல்ஏ ஆகியோர் மரமணமடைந்தனர். இதனால், காலியாக உள்ள இந்த 6 தொகுதிகளுக்கும் விரைவில் இடைதேர்தல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மொட்டை போட்ட சினிமா டைரக்டர்:
கேரள சினிமா உலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் அலி அக்பர். முகமுத்ரா, ஜூனியர்  மான்ட்ரேக், சீனியர் மான்ட்ரேக், குடும்ப வார்த்தகள் உள்பட ஏராளமான படங்களை இயக்கி உள்ளார். பா.ஜ. ஆதரவாளரான இவர், மக்களவை தேர்தலில் பாஜ.வுக்கு ஆதரவாக கேரளாவில் பிரசாரம்  செய்தார். அப்போது, திருவனந்தபுரம் தொகுதி பாஜ வேட்பாளர் கும்மனம் ராஜசேகரன் தோல்வி அடைந்தால் மொட்டை அடிப்பேன் என சபதம் செய்தார்.

அதே போல் அவர் தோல்வி அடைந்து விட்டார். இதனால், சவால் விட்டப்படி நேற்று மொட்டை அடித்தார். அந்த படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘‘கும்மனம் ராஜசேகரன் தோல்வி அடைந்தது வருத்தம் அளிக்கிறது. திருவனந்தபுரம் மக்கள் அவரை தோற்கடிப்பார்கள் என சிறிதும் எதிர்பார்க்கவில்லை,’’ என்றார்.

Tags : Deposit evacuation ,Sabarimala ,BJP , Baju, abandoned, Sabarimala, 13th volume, deposited empty
× RELATED சொல்லிட்டாங்க...