×

சூலூர் வாக்கு எண்ணிக்கையில் 7 ஆயிரம் ஓட்டு மாயம்: பதிவானது 2,34,380 எண்ணியது 2,25,058 வாக்குகள்

சூலூர்: சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளில் 7 ஆயிரம் வாக்குகள் காணாமல் போயுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற இடைத்தேர்தல் கடந்த 19ம் தேதி நடந்தது. இதில் சூலூர் சட்டமன்றத்திற்குட்பட்ட தொகுதியில் உள்ள 2 லட்சத்து 95 ஆயிரத்து 158 பேர் உள்ளனர். இதில் வாக்குப்பதிவு நாளன்று 2 லட்சத்து 34 ஆயிரத்து 380 பேர் வாக்குகளை பதிவு செய்துள்ளதாக சூலூர் தேர்தல் நடத்தும் அலுவலர் பாலகிருஷ்ணன் அறிவித்திருந்தார். அதன்படி தேர்தல் ஆணையமும் 79.41 சதவீத வாக்கு பதிவாகியுள்ளதாக அறிக்கை வெளியிட்டன.

இந்நிலையில், நேற்று முன்தினம் வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் யார், யார் எவ்வளவு வாக்கு பெற்றுள்ளனர் என்பதற்கான சான்று நேற்று தேர்தல் ஆணையத்தின் சார்பில் அளிக்கப்பட்டது. இதன்படி தேர்தல் அதிகாரி கொடுத்த படிவம் 21ல் மொத்தம் பதிவான வாக்குகள் 2 லட்சத்து 26 ஆயிரத்து 918 வாக்கு என்றும், இதில் செல்லுபடியான வாக்கு 2 லட்சத்து 25 ஆயிரத்து 58 வாக்குகள், நோட்டாவுக்கு 1938 வாக்குகள், செல்லாத வாக்குகள் 2 என மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 998 வாக்கு எண்ணப்பட்டதாக சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாக்குப்பதிவு நாளன்று வாக்குப்பதிவு ஆனதாக சொன்ன எண்ணிக்கைக்கும் தற்போது அளித்திருக்கும் சான்றிதழுக்கும் இடையே 7 ஆயிரத்து 351 வாக்குகள் மாயமாகியுள்ளது. இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் பாலகிருஷ்ணனிடம் கேட்டபோது, வாக்குப்பதிவு நாளன்று வாக்கு மையத்தில் இருக்கும் அதிகாரிகள் போனில் கொடுத்த தகவல்களையே நாங்கள் பத்திரிகைக்கும், காவல் துறைக்கும் தெரிவித்தோம். ஆனால் தற்போது உண்மையான வாக்குகளைதான் நாங்கள் எண்ணியுள்ளோம் என்று பதில் கூறினார்.

ஏற்கனவே வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு சந்தேகங்கள் இருக்கும் நிலையில்  தற்போது வாக்குப்பதிவு நாளன்று பதிவானதாக சொல்லப்பட்ட வாக்குகளுக்கும் வாக்கு எண்ணிக்கையன்று எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே பெரிய அளவிலான வித்தியாசம் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Sulur , Sulur, vote count, 7 thousand driving, magic
× RELATED தாமரையை தோற்கடிக்கணும்… மனதில் இருப்பதை கொட்டிய டிடிவி