பொள்ளாச்சி பாலியல் விவகாரம் திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை: பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, மணிவண்ணன் உள்ளிட்ட 5 பேர் மீது நேற்று சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாணவி மற்றும் இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து படம் எடுத்து மிரட்டிய வழக்கில் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த சபரிராஜன் (25), சதீஸ்(28), வசந்தகுமார்(24), திருநாவுக்கரசு(27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இவர்கள் 4 பேரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதில் புகார் கொடுத்த பெண்ணின் சகோதரனை தாக்கிய வழக்கில் கைதான மணிவண்ணன் பாலியல் வன்கொடுமை வழக்கில் சேர்க்கப்பட்டார். இதற்கிடையே இவ்வழக்கு சிபிசிஐடியில் இருந்து சிபிஐக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், சிபிஐ அதிகாரிகள் கடந்த சில வாரங்களாக பொள்ளாச்சியில் பாலியல் பலாத்கார வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகள், குற்றவாளிகளின் நண்பர்கள் என பலரிடம் விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேர் மீது கோவை சிஜேஎம் கோர்ட்டில்  நீதிபதி நாகராஜனிடம் சீலிடப்பட்ட கவரில்  நேற்று முதற்கட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து, பொள்ளாச்சி பாலியல் வழக்கு  சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

× RELATED வெளிமாநில சுற்றுலா செல்லும் முதியவர்கள்