×

கனிமொழி மீது முதல்வர் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை

சென்னை: திமுக எம்.பி. கனிமொழி மீது முதல்வர் பழனிசாமி சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த 2018 செப்டம்பர் 18ம் தேதி திண்டிவனத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திமுக எம்.பி. கனிமொழி, தமிழக அரசு மீதும், முதல்வர் பழனிசாமி மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியதுடன், முதல்வருக்கு பட்டம் வழங்க வேண்டுமென பேசியுள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமி சார்பில் கனிமொழி மீது விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அக்டோபர் மாதம் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜூன் 4ம் தேதி நேரில் ஆஜராகுமாறு கனிமொழிக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இதையடுத்து, விழுப்புரம் நீதிமன்றத்தின் சம்மனை ரத்து செய்யக் கோரியும், அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரியும், வழக்கை ரத்து செய்யக் கோரியும் கனிமொழி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜமாணிக்கம், விழுப்புரம் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்ததுடன், கனிமொழி நேரில் ஆஜராக விலக்கு அளித்தும் உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் தமிழக அரசு 4 வாரத்தில் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Tags : Chief Minister ,Kanimozhi ,trial , Kanimozhi, Chief Minister, defamation case, trial,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...