×

பாஜவுடன் கூட்டணி சேர்ந்ததால் அதிமுக தோல்வி அடைந்ததா?: அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

சென்னை: தமிழகத்தில் பாஜவுடன் கூட்டணி சேர்ந்ததால் அதிமுக தோல்வி அடைந்துவிட்டதா என்ற கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் வாக்காளர்களும் சரி, பொதுமக்களும் சரி ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு நபராகத்தான் டிடிவி.தினகரனின் நிலை இருக்கிறது. அது இப்போது நன்றாக தெரிந்து விட்டது. நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை தமிழகத்தில் அதிமுக தலைமையில் ஒரு மெகா கூட்டணி அமைத்து, ஜெயலலிதா செய்த திட்டங்களையெல்லாம் மக்களிடம் எடுத்து சொன்னோம். ஆனால், ஒரு தவறான பிரசாரம் அது கதிராமங்கலம் ஆனாலும் சரி, மீத்தேன் எரிவாயு என்றாலும் சரி, நீட் ஆனாலும் சரி, ஜிஎஸ்டி என எல்லாமே அதிமுகதான் காரணம் என்று பிரசாரம் செய்யப்பட்டது. அந்த பிரசாரம் தற்காலிகமாக எடுபட்டு விட்டது.

தமிழக மக்கள் நல்ல ஒரு தீர்ப்பை சட்டமன்றத்துக்கு வழங்கி இருக்கிறார்கள். கவலையில்லாமல் தனிப்பெரும்பான்மையோடு நாங்கள் 2021 வரை ஆட்சியை நடத்தி, அதன்பிறகும் மீண்டும் மக்களை சந்தித்து அதிமுக ஆட்சி தொடரும். பாஜவுடன் கூட்டணி சேர்ந்ததால் அதிமுக தோல்வி அடைந்துவிட்டதா என்று கேட்கிறீர்கள். அனுமானத்திற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரைக்கும் மக்களின் தீர்ப்பு தெளிவாக இருக்கிறது.  நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை மக்கள் தீர்ப்பு குறித்து கட்சி நிச்சயம் ஆய்வு செய்யும். தமிழகத்தில் வருகிற உள்ளாட்சி தேர்தலில் தற்போதுள்ள கூட்டணி தொடருமா என்பது கொள்கை முடிவு. அதுகுறித்து கட்சிதான் முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : AIADMK ,Jayakumar ,alliance ,Bhajan ? , Alliance with the BJP, AIADMK, defeat, Minister Jayakumar
× RELATED வரலாறு தெரியாமல் அண்ணாமலை பேசுகிறார்:...