×

பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் 6,281 வாக்குகள் மட்டுமே பெற்று 5ம் இடத்திற்கு தள்ளப்பட்ட அமமுக: டெபாசிட் இழந்தார் வெற்றிவேல்

சென்னை: பெரம்பூர் இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட்ட ெவற்றிவேல் 6281 வாக்குகள் பெற்று 5ம் இடத்திற்கு தள்ளப்பட்டார். 17வது மக்களவை தேர்தல் மற்றும் 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 18 மற்றும் மே 18ம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் திமுக தலைமையில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி ஒரு அணியாகவும், அதிமுக தலைமையில் பாஜ, பாமக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம் கட்சி ஒரு அணியாகவும், நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சி தனியாகவும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தலில் போட்டியிட்டன. அதைபோன்று அதிமுகவில் பிரிந்து வந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், எஸ்டிபிஐ கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. இந்நிலையில், பெரம்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் ஆர்.டி.சேகர், அதிமுக சார்பில் ராஜேஷ், மக்கள் நீதிமய்யம் சார்பில் பிரியதர்ஷினி, நாம் தமிழர் கட்சி சார்பில் மெர்லின் சுகந்தி போட்டியிட்டனர். கடந்த முறை அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்த வெற்றிவேல் தற்போது அமமுக சார்பில் போட்டியிடுவதாலும், தொகுதி மக்களிடையே அறிமுகமானவர் என்பதாலும், அமமுவின் முக்கிய நபராக விளங்கியதால் பெரம்பூர் இடைத்தேர்தலில் அதிகமான வாக்குகள் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.தேர்தல் முடிந்து, சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் பணி நேற்று முன்தினம் ராணி மேரி கல்லூரியில் நடந்தது. மொத்தம் 22 சுற்றுகள் வரை வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் திமுக சார்பில் போட்டியிட்ட ஆர்.டி.சேகர் முதல் சுற்றில் இருந்து 22 சுற்றுகள் வரை எண்ணப்பட்ட நிலையில் 1,06,394 வாக்குகள் பெற்று முதல் இடத்திலும், அதிமுக சார்பில் போட்டியிட்ட ராஜேஷ் 38,371 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட பிரியதர்ஷினி 20,508 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்திலும், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் மெர்லின் சுகந்தி 8,611 வாக்குகள் பெற்று நான்காம் இடத்திலும் உள்ளனர். ஆனால் அமமுக சார்பில் போட்டியிட்ட வெற்றிவேல் 22 சுற்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் வெறும் 6,281 வாக்குகள் பெற்று கடைசியில் 5ம் இடத்திற்கு தள்ளப்பட்டதும், டெபாசிட் காலியானதும் அமமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

68,023 வாக்குகள் வித்தியாசம்

பெரம்பூர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் 1,06,394 பெற்று 68,023 வாக்கு வித்தியாசத்தில் பெற்று வெற்றி பெற்றார். ஆனால் அதிமுக சார்பில் போட்டியிட்ட ராஜேஷ் 38,371 மற்றும் அதிமுகவில் இருந்து பிரிந்து அமமுக சார்பில் போட்டியிட்ட வெற்றிவேல் 6,281 பெற்றிருந்தனர். இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து பெற்ற வாக்குகள் 44,652தான். ஆனால் திமுக வேட்பாளர் 68,023 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Perambur Assembly Elections , Perambur, Assembly Election with 6,281 votes, victory
× RELATED பிரதமர் சர்ச்சைக்குரிய கருத்தை...