×

மநீம பாஜவின் ‘பி’ டீமா?: கமல்ஹாசன் ஆவேசம்

சென்னை: ‘நாங்கள் பாஜவின் ‘பி’ டீம் என்று சொல்வதா?’ என்று மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் ஆவேசமாக கேட்டார். இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். கட்சி தொடங்கி 14 மாதங்களான நிலையில், மக்கள் இந்த குழந்தையை எழுந்து ஓட வைப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எல்லோரும்  எங்களை பார்த்து கொக்கரித்தபோது, தமிழக மக்களிடம் இருந்து பாராட்டுகள் வந்தது. எப்படியோ நாங்கள் தப்பித்துவிட்டோம் என்று பெருமூச்சு விடவில்லை. நல்வழியில், நேர்வழியில் சென்றால் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கையை மக்கள்  கொடுத்துள்ளனர். 14  மாதங்களில் என்ன செய்ய முடியுமோ அதை செய்துள்ளோம். புதிதாக உருவான எங்கள் கட்சிக்கு 3வது இடம் என்பது பெரிய  சாதனைதான்.

பாஜ வெற்றி என்பது மக்களின் தீர்ப்பு.  ஆனால், அது தமிழக  மக்களின் தீர்ப்பு அல்ல என்பதுதான் என் சந்தோஷம். மாற்றத்தை  வேண்டி மக்கள் வாக்களித்தார்கள். மக்களின் வறுமையை வெல்வது கடினம்  என்பதே நாங்கள் கற்றுக்கொண்ட பாடம். திமுக வெற்றியால் எங்களுக்கு  ஏமாற்றம் இல்லை. இது எங்களுக்கு அயர்ச்சி ஏற்படுத்தவில்லை. பாஜவின் ‘பி’ டீம் சர்ச்சை குறித்து கேட்கிறீர்கள். எல்லா பக்கமும் இந்த  கேள்வியை கேளுங்கள். இந்த கேள்வி எங்களுக்கு கொஞ்சம் அவமானமாக இருக்கிறது.  நாங்கள் நேர்மைக்கு ‘ஏ’ டீம். தமிழகம் இந்தியாவின் ஒரு பகுதி. அதை வளமாக வைத்திருக்க வேண்டும். இது பாஜவின் கடமை. வெற்றிபெற்ற மாநிலங்களுக்கு நிகராக தமிழகத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இதுதான் பிரதமருக்கு என் வேண்டுகோள். விவசாயம் கெட்டுப்போகாத திட்டங்களை தமிழகத்துக்கு ெகாண்டு வர வேண்டும். நாங்கள் புழங்கும் இடத்தை அசிங்கப்படுத்தி விடாதீர்கள். தமிழகத்தின் எழுச்சிதான் எங்கள் இலக்கு. வென்றவர்களுக்கு வாழ்த்து சொல்லலாம். தோற்றவர்களுக்கு ஆறுதல் சொல்வது என் வேலையல்ல. அரசியல் என் தொழில் அல்ல. மக்களுக்கு சேவை செய்வது என் கடமை. கலைத்துறையில் ஈடுபடுவதன் மூலம் நேர்மையாக பணம் சம்பாதிக்கிறேன். அரசியலில் ஈடுபட்டாலும், சினிமாவில் இருந்து விலக மாட்டேன். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

Tags : Madam Bhajan ?: Kamal Hassan , Goddess, Kamal Haasan, angry
× RELATED தினமும் பொய் பேசும் அரசியல் காமெடியன் அண்ணாமலை: திருமாவளவன் விளாசல்