×

என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த தூத்துக்குடி மக்களுக்கு நன்றி; அவர்களின் நம்பிக்கைக்காக பாடுபடுவேன்... கனிமொழி பேட்டி

சென்னை: என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த தூத்துக்குடி மக்களுக்கு நன்றி; அவர்களின் நம்பிக்கைக்காக பாடுபடுவேன் என எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 350 இடங்களிலும், காங்கிரஸ் 90 இடங்களிலும், மற்றவை 102 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் திமுக 38 இடங்களிலும், அதிமுக 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட போட்டியிட்ட கனிமொழி 5,63,143 வாக்குகள் பெற்று 3,47,209 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக 2,15,934 வாக்குகளும், அமமுக 76,866 வாக்குகளும், நா.த. 49,222 வாக்குகளும் மநீம 25,702 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் திமுக எம்.பி. கனிமொழி அஞ்சலி செலுத்தினார். பின்னர் பேட்டியளித்த அவர் கூறுவதாவது; கோடிக்கணக்காக தமிழ் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிற தலைவர் கலைஞர் நினைவுகளை மனதில் தாங்கிக்கொண்டு, திமுக பெற்றிருக்கக்கூடிய வெற்றியையும், தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலில் பெற்றிருக்கக்கூடிய வெற்றியையும் தலைவர் கலைஞர் அவர்களுக்கு சமர்ப்பிக்க வந்துள்ளேன் என தெரிவித்துள்ளார். திமுக வெற்றிக்காக பாடுபட்டவர்களுக்கும், திராவிட கழகத்தின் நிர்வாகிகளுக்கும், கூட்டணி கட்சிகளை சார்ந்த நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்தார்.

தூத்துக்குடி தொகுதியில் எங்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கும் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து தூத்துக்குடி மக்களின் குரல்களாக பாராளுமன்றத்தில் ஒலிப்பேன்; அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் முன்வைப்பேன் என தெரிவித்துள்ளார். தமிழகத்திலும் கேரளாவிலும் இருக்கக்கூடிய மக்கள் வேறு ஒரு சிந்தனை பாதையை சார்ந்தவர்கள், குறிப்பாக தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தின் உழைப்பு என்பது இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.


Tags : Thoothukudi ,interview ,Kanimozhi , Thoothukudi, Thank you, I will try, Kanimozhi
× RELATED நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல்;...