×

கொள்கை ரீதியாக பாஜ.வுடன்போட்டிப் போடுவது தொடரும்: ராகுல் காந்தி அறிவிப்பு

புதுடெல்லி: ‘‘இந்திய மக்கள் நரேந்திர மோடியை பிரதமராக தேர்வு செய்துள்ளனர். அவருக்கு எனது வாழ்த்துக்கள். அதே நேரம், பாஜ.வுடன் கொள்கை ரீதியாக போட்டிப் போடுவது தொடரும்,’’ என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். கேரள மாநிலம், வயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மிக அதிக வாக்குகள் பெற்று இமாலய வெற்றி பெற்றார். ஆனால், அமேதி தொகுதியில் அவர் தோல்வி அடைந்தார். காங்கிரசும் தோற்றது. இந்நிலையில், டெல்லியில் நேற்று மாலை நிருபர்களுக்கு ராகுல் காந்தி பேட்டி அளித்தார். அப்போது, ‘தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து விலகுவீர்களா?’ என நிருபர்கள் அவரிடம் கேட்டனர்.

அதற்கு ராகுல் அளித்த பதில் வருமாறு:
காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி ஏற்பட்டதை தொடர்ந்து, தலைவர் பதவியில் விலகுவதா அல்லது நீடிப்பதா என்பது குறித்து காங்கிரஸ் செயற்குழு விரைவில் கூடி விவாதிக்க உள்ளது. எதனால் காங்கிரஸ் தோல்வி அடைந்தது என்பது குறித்து இன்றே விரிவாக தெரிவிப்பது சரியல்ல. இதுபோல், அமேதி தொகுதியில் வெற்றி பெற உள்ள ஸ்மிருதி இரானிக்கும் வாழ்த்துக்கள். அவர் அமேதி தொகுதி மக்களின் நலனை பேண வேண்டும். அவரது பொறுப்புகளை உணர்ந்து நிறைவேற்ற வேண்டும்.

இந்த தேர்தலில் பாஜ.வுக்கு பெரிய வெற்றி கிடைத்துள்ளது. நரேந்திர மோடியை மக்கள் மீண்டும் பிரதமராக தேர்வு செய்துள்ளனர். இதற்கு அவருக்கும், பாஜ.வினருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இருப்பினும், கொள்கை ரீதியாக ஒற்றுமையாக நின்று பாஜ.வுடன் போட்டியிடுவது தொடரும். தொண்டர்கள் மனம் தளர வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

மோடிக்கு பிரியங்கா வாழ்த்து:
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறுகையில், ‘‘மக்கள் அளித்த தீர்ப்பை காங்கிரஸ் முழுமையாக மதிக்கிறது. தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கும், அவரது கட்சி தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்,’’ என்றார்.

Tags : Rahul Gandhi ,announcement , Politically, Bhaj, contesting, will continue
× RELATED ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டத்தை...