×

கேரளாவில் 20ல் காங்கிரசுக்கு 19: மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒரு இடம்

திருவனந்தபுரம்: கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 19 தொகுதிகளிலும், இடதுமுன்னணி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த முறையும் பா.ஜவால் கேரளாவில் கணக்கு தொடங்க முடியவில்லை. கேரளாவில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 23ம் தேதி நடந்தது. இடதுமுன்னணி கூட்டணியில் மார்க்சிஸ்ட் 14 தொகுதிகளிலும். இந்திய கம்யூ. 4 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் ஆதரவு சுயேச்சைகள் 2 தொகுதிகளிலும் போட்டியிட்டனர். காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் முஸ்லிம் லீக் 2  தொகுதிகளிலும் ஆர்எஸ்பி, கேரள காங்கிரஸ் (எம்) தலா ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன.

கேரளாவில் மொத்தம் 77.68 சதவீதம் வாக்குகள் பதிவாயின. ராகுல் போட்டியிட்ட வயநாடு உட்பட 8 தொகுதிகளில் 80 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவாயின. இந்நிலையில் நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன, தொடக்கம் முதலே பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலை வகித்தனர். கம்யூனிஸ்ட் கோட்டையாக கருதப்படும் தொகுதிகளில் கூட காங்கிரஸ் வேட்பாளர்களே தொடர்ந்து முன்னிலை வகித்தனர்.

இந்த நிலையில் ஆலப்புழா தவிர அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றனர். மார்க்சிஸ்ட் கோட்டையாக கருதப்படும் ஆற்றிங்கல், பாலக்காடு, ஆலத்தூர், தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்த 8 வேட்பாளர்கள் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். முஸ்லிம் லீக் சார்பில் மலப்புரம் தொகுதியில் போட்டியிட்ட குஞ்ஞாலிகுட்டி 2 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சானுவை தோற்கடித்தார்.

கடந்த 2014ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 12 தொகுதிகளிலும் இடதுமுன்னணி 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. கேரள வரலாற்றில் இதுவரை இடதுமுன்னணி இந்த அளவிற்கு மோசமான தோல்வியை சந்தித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே இந்த தேர்தலில் பா.ஜ.விற்கு திருவனந்தபுரம் மற்றும் பத்தனம்திட்டா தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பெரும்பாலான கருத்து கணிப்புகளில் ஒரு தொகுதியில் பா.ஜ.விற்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

இதுவரை கேரளாவில் மக்களவை தேர்தலில் பா.ஜ. வெற்றி பெற்றதில்லை. இந்த தேர்தலில் கண்டிப்பாக கணக்கை பா.ஜ. தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திருவனந்தபுரம் தொகுதியில் ேபாட்டியிட்ட கும்மனம் ராஜசேகரனால் 2வது இடத்தையே பிடிக்க முடிந்தது.
திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடுவதற்காக இவர் மிசோரம் மாநில கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சபரிமலை கோயில் அமைந்துள்ள பத்தனம்திட்டா தொகுதியிலும் பா.ஜ. தோல்வியடைந்தது. இங்கு போட்டியிட்ட பா.ஜ. மாநில பொது செயலாளர் சுரேந்திரனால் 3வது இடத்தையே பிடிக்க முடிந்தது. இதனால் இம்முறையும் கேரளாவில் பா.ஜவால் கணக்கை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Tags : Kerala ,Congress ,Marxist Party , Kerala, 20th, 19th, Marxist Party, a place in Kerala
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...