×

வடகிழக்கு மாநிலங்களில் பாஜ கூட்டணி ஆதிக்கம்

புதுடெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் பாஜ, அதன் கூட்டணி கட்சிகள் 16 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் 2, அசாமில் 14, மணிப்பூரில் 2, மேகாலயாவில் 2, மிசோரம், நாகலாந்து, சிக்கிம் மாநிலங்களில் தலா 1, திரிபுராவில் 2 என வடகிழக்கு மாநிலங்களில் மொத்தம் 25 மக்களவைத் தொகுதிகள் உள்ளன.

கடந்த 2014 தேர்தலில் இந்த மாநிலங்களில் பாஜ, அதன் கூட்டணி கட்சிகள் 9 இடங்களை மட்டுமே பிடித்தன. அதை இந்த தேர்தலில் பாஜ இரட்டிப்பாக்கி சாதனை புரிந்துள்ளது. கடந்த முறை காங்கிரஸ் வசமிருந்த 5, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டிடம் இருந்த 2 தொகுதிகளை பாஜ கைப்பற்றியுள்ளது. இதன் மூலம், பாஜ தனது எண்ணிக்கையை 16 ஆக உயர்த்தி கொண்டுள்ளது.

பாஜ.வும், அதன் கூட்டணி கட்சிகளும் அருணாச்சலில் 2, அசாமில் 10, மணிப்பூரில் 1, மேகாலயாவில் 1, திரிபுராவில் 2 என மொத்தம் 16 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. இதன் மூலம், வடகிழக்கு மாநிலங்களில் முன்பு எப்போதும் இல்லாத வளர்ச்சியை பாஜ எட்டியுள்ளது. அருணாச்சல் மேற்கு தொகுதியில் போட்டியிட்ட மத்திய இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ 43,307 வாக்குகள் பெற்றார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான நபாம் துகி 11,030 வாக்குகள் மட்டுமே பெற்றார்.அதேபோல், அசாமில் ஜோர்கத் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட பாஜ மாநில தலைவர் தபோன் குமார் கோகாய் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 198 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சுஷாந்த போர்கோகெயினுக்கு 95,384 வாக்குகளே கிடைத்தது. இதன் மூலம், வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் பலவீனமடைந்து வருவதும், பாஜ வலுவடைந்து வருவதும் தெரிகிறது. கடந்த முறை காங்கிரஸ் வசமிருந்த 5, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டிடம் இருந்த 2 தொகுதிகளை பாஜ கைப்பற்றியுள்ளது.

Tags : BJP ,alliance ,states , Northeast State, BJP Alliance, dominated
× RELATED ரொம்ப திட்டுறாங்க ஆபீசர்….தேர்தல் ஆணையத்தில் பா.ஜ பரபரப்பு புகார்