×

தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 38 எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் பாஜவுக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில் செயல்படுவோம்: கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 38 எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் பாஜவுக்கு சவுக்கடி கொடுக்கும் வகையில் செயல்படுவோம் என்று கே.எஸ்.அழகிரி கூறினார். தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சத்தியமூர்த்திபவனில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:  பாஜவுடன் கூட்டு சேர்ந்த அனைவரும் எடுத்த தவறான நடவடிக்கை காரணமாக தென்னிந்திய மக்கள் பாஜவை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்ற குறைந்தபட்ச புரிதல் கூட இல்லாமல் பாஜவை ஏற்றுக் கொண்ட அந்த கூட்டணி தலைமை என்பது, அவர்களை படுகுழியிலே வீழ்த்தியிருக்கிறது. ஆனால் எங்களுடைய கூட்டணி என்பது தமிழக மக்களை மேம்படுத்தும். தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்காக நாங்கள் பாடுபடுவோம். தமிழக மக்களின் உரிமைக்காக, வளர்ச்சிக்காக, வேலை வாய்ப்புக்காக பாடுபடுவோம். எல்லாவற்றுக்கும் மேலாக சுதந்திரமாக சிந்திக்கக்கூடிய நாகரீகமான ஒரு சமூக அமைப்பை தமிழகத்தில் உருவாக்குவதற்கு நாங்கள் பாடுபடுவோம்.  
 மோடிக்கு ஆதரவான நிலையை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. மோடி வெற்றி பெற்றிருக்கிறார். இந்தியா தோல்வியடைந்துவிட்டது என்று நான் சொன்னதற்கு இது தான் பொருள். சில நேரங்களில் மக்கள் தவறான முடிவு எடுப்பதுண்டு. ஆனாலும் நாங்கள் தோல்வியை ஏற்றுக் கொள்கிறோம். 5 எம்பிகள் இருந்தாலே நாடாளுமன்றத்தை ஒரு கலக்கு கலக்கிவிடலாம்.

 ஆனால் அதிமுகவில் 50 எம்பிக்கள் இருந்தாலும் அவர்கள் வேடிக்கை பார்க்க மட்டுமே சென்றனர். அவர்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. திமுகவில்  அப்படி அல்ல. செயல்படக்கூடிய, கேள்வி கேட்கக்கூடிய, ஆற்றல் படைத்த எம்பிக்கள் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 38 பேர் நாடாளுமன்றம் செல்ல போகிறோம். எதைப்போன்ற சவுக்கடியை பாஜகவுக்கு கொடுக்கப் போகிறோம் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.  அதிமுக, பாஜ மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை தான் சொல்கிறது.   இடைத்தேர்தலில் கூட ஆளுங்கட்சியை விட எதிர்கட்சி முன்னிலையில் இருக்கிறது. எனவே ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள் என்பது தெரிகிறது. ஆளுங்கட்சியாக பார்த்து ராஜினாமா செய்ய வேண்டும். நாடாளுமன்றத்திலும், இடைத்தேர்தலிலும் மக்கள் அதிமுகவுக்கு அங்கீகாரம் தரவில்லை. எனவே அவர்களாகவே ராஜினாமா செய்வது தான் ஜனநாயகம்.  இவ்வாறு அவர் கூறினார்.



Tags : MPs ,lapse ,Tamil Nadu ,KS Azhagiri , 38 MPs, Tamil Nadu, whip , Bhajan , KS Azhagiri
× RELATED தமிழகத்தில் இருந்து வெற்றிபெற்று 5...