×

வெற்றி வாய்ப்பு பிரகாசமானதும் மவுன விரதத்தை கலைத்த பிரக்யா

போபால், மே 24: மத்தியப் பிரதேசத்தின் போபால் தொகுதி பாஜ வேட்பாளரான பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர் வெற்றி வாய்ப்பு பிரகாசமானதை அடுத்து தனது 63 மணி நேர மவுன விரதத்தை கலைத்தார். மத்தியப் பிரதேசத்தின் போபால் தொகுதியில் பாஜ சார்பாக பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர் களமிறக்கப்பட்டார். இவர் மாலேகான் குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவராவார். சாத்வி உட்பட 7 பேரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சாட்சிகளின் வாக்குமூலங்கள் தற்போது பதிவு செய்யப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கடந்த ஏப்ரலில் சாத்வி பிரக்யா சிங் பாஜவில் இணைந்தார். தொடர்ந்து மக்களவை தேர்தலில் போபால் தொகுதியில் போட்டியிடுவதற்கு அவருக்கு பாஜ வாய்ப்பு வழங்கியது. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரக்யா, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறிய கருத்துக்கு பதிலளிக்கும்போது, நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என கூறினார். இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பின்னர் அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.

எனினும் பிரக்யா சிங் தாகூரை தன்னால் மன்னிக்க இயலாது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். பிரக்யா சிங்கை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் திக்விஜய் சிங் போட்டியிட்டார். இந்நிலையில் தான் எதை பேசினாலும் சர்ச்சையானதால் பிரக்யா சிங் மவுன விரதம் இருப்பதாக அறிவித்தார். ‘‘பிரசாரம் முடிவடைந்தது. இது ஆத்ம பரிசோதனைக்கான நேரம்’’ என்று கூறிய அவர் 63 மணி நேரம் மவுன விரதம் இருப்பதாக அறிவித்தார்.

நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது பின்னடைவில் இருந்த பிரக்யா, நேரம் ஆக பிரக்யா பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய் சிங்கை காட்டிலும் அவர் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனையடுத்து தனது மவுனத்தை கலைத்த பிரக்யா சிங் தாகூர், “மக்கள் எனக்கு நல்ல பதிலை அளித்துள்ளனர்” என்றார்.

Tags : Success, brightness, silence, prakya
× RELATED வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தேனா? அண்ணாமலை பேட்டி