×

தெலங்கானாவில் ஏமாந்தார் கேசிஆர்: கிங் மேக்கர் கனவு கலைந்தது

ஐதராபாத், மே 24: தெலங்கானாவில் மொத்தமுள்ள 17 மக்களவை தொகுதிகளில் 8ல் ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) முன்னிலை பெற்றுள்ளது. அதேவேளையில் தேசிய கட்சிகளான பாஜ.வும், காங்கிரசும் தலா 4 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. டிஆர்எஸ் தலைவரும், மாநில முதல்வருமான கே.சந்திரசேகர ராவ் (கேசிஆர்) அனைத்து தொகுதிகளிலும் தனது கட்சி வெற்றி பெறும் என்று நம்பிக்கையுடன் இருந்தார்.

இதனால், மத்தியில் தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால், ‘கிங் மேக்கர்’ ஆகி விடலாம் என நினைத்து, அதற்கான காய்களை நகர்த்தினார். ஆனால், அவருடைய கணிப்பும்  மக்களின் கணிப்பும் வேறுவேறாக அமைந்துள்ளதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. டிஆர்எஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து ஐதராபாத் தொகுதியில் போட்டியிட்ட ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாருதீன் ஒவ்வாசி முன்னிலை பெற்றுள்ளார். பிற்பகல் 3 மணி நிலவரப்படி, ஒவ்வாசி தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ. வேட்பாளர் பகவந்த் ராவைவிட 1.47 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகித்தார்.  இந்த தொகுதியில் இவர் 4வது முறையாக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் சந்திரசேகர ராவும் ஒவ்வாசியும் கூட்டணி சேர்ந்த பின்னர், மாநிலத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று திரும்ப திரும்ப கூறினர். கடந்த 2018 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதுபோல் அபார வெற்றியைப் பெறுவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர். அது நடக்காமல் போய் விட்டது. அடிலாபாத், கரீம்நகர் தொகுதிகளில் பா.ஜ. முன்னிலை பெற்றுள்ளது. அதேபோல், தெலங்கானா காங்கிரஸ் செயல் தலைவர் ரேவநாத் ரெட்டி, மால்காஜ்கிரி தொகுதியில் டிஆர்எஸ் வேட்பாளரைவிட 2 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகித்தார்.

நலகொண்டா தொகுதியில் போட்டியிட்ட மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் உத்தம் குமார் ரெட்டி, 3 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் ரேணுகா சவுத்ரி, கம்மம் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட டிஆர்எஸ் வேட்பாளர் நாகேஸ்வர ராவைவிட 1.07 லட்சம் வாக்குகள் குறைவாக பெற்று தோல்வியை தழுவும் நிலையில் இருந்தார்.

கவிதா காலி ஆவாரா?
இந்த மக்களவை தேர்தலில் நாட்டிலேயே அதிக வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதியான நிஜாமாபாத், தெலங்கானாவில்தான் உள்ளது. இங்கு, முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா போட்டியிட்டார். இவரை எதிர்த்து 200க்கும் மேற்பட்ட மஞ்சள், நெல் விவசாயிகள் மனுத்தாக்கல் செய்தனர். முதல்வர் சந்திரசேகர ராவ் தங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என எதிர்ப்பு தெரிவித்து, இந்த காரியத்தை செய்தனர். நேற்று மாலை வரையிலான நிலவரப்படி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ. வேட்பாளர் டி.அரவிந்தை விட கவிதா 32,621 வாக்குகள் குறைவாகப் பெற்று பின் தங்கியிருந்தார்.

Tags : King Maker ,Telangana , Telangana, Cheated, Kaseir, Dream, Disappeared
× RELATED காதலனை திருமணம் செய்து கொண்டதால்...