×

காங்கிரசை வட மாநிலங்கள் கைவிட்ட நிலையில் ஆறுதல் அளித்த பஞ்சாப்: 8 தொகுதிகளில் முன்னிலை

பஞ்சாப், மே 24: வட மாநிலங்கள் கைவிட்ட நிலையில், பஞ்சாப் மாநிலம் மட்டும் காங்கிரசுக்கு கை கொடுத்துள்ளது. இந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கணிசமான வெற்றியை பெறும் என கருதப்பட்டது. அதற்கு ஏற்றாற்போல் அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சூறாவளி பிரசாரத்தை செய்தார். ஆனால், நேற்றைய வாக்கு எண்ணிக்கை இந்த கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கி விட்டது. தென் மாநிலங்கள் கை கொடுத்தது போல், வட மாநிலங்கள் ஒன்று கூட காங்கிரசுக்கு கை கொடுக்கவில்லை. இதில், பஞ்சாப் மட்டுமே விதி விலக்காக இருந்தது.

இம்மாநிலத்தில் தற்போது முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள 13 மக்களவை தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிட்டது. ஜனநாயக ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்டது. அக்கூட்டணி மற்றும் காங்கிரஸ், பாஜ கட்சிகளிடையே பலத்த போட்டி நிலவியது. 13 தொகுதிகளில் 24 பெண்கள் உள்பட 278 பேர் போட்டியிட்டனர்.

சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல், நடிகரும் அரசியல்வாதியுமான சன்னி தியோல், மத்திய அமைச்சர்கள் ஹர்ஷிம்ரத் கவுர் பாதல், ஹர்திப் சிங் புரி, காங்கிரஸ் சார்பில் பளு தூக்கும் வீர சுனில் ஜாக்கர், பிரினீத் கவுர் மற்றும் மணீஷ் திவாரி ஆகியோர் நட்சத்திர வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.

யூனியன் பிரதேசமான சண்டிகாரில் பாஜ.வின் கிர்ரன் கேர், காங்கிரசில் முன்னாள் அமைச்சர் பவன் குமார் பன்சால், ஆம் ஆத்மி கட்சியில் ஹர்மோகன் தவான் ஆகியோர் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8.00 மணிக்கு தொடங்கியதில் இருந்தே, காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலை வகித்தனர். 12.30 மணி வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, 10 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகித்தது.

ஒரு தொகுதியில் பாஜ.வும், ஒரு தொகுதியில் ஆம் ஆத்மியும் முன்னிலை வகித்தன. குர்தாஸ்புரில் போட்டியிட்ட பாஜ வேட்பாளரும், இந்திப்பட நடிகருமான சன்னி தியோல் 47,000 வாக்கு அதிகம் பெற்று முன்னிலை வகித்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சுனில் ஜாக்கர் பின்தங்கினார்.

இத்தொகுதியில் பாஜ. எம்பியாக இருந்த பிரபல இந்தி நடிகர் வினோத் கன்னா மறைந்ததை அடுத்து, 2017ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜாக்கர் வெற்றி பெற்றார். மாலை 8 மணி நேர நிலவரப்படி காங்கிரஸ் 8, பாஜ 2, எஸ்ஏடி 2 மற்றும் ஆம் ஆத்மி 1 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தன.

Tags : Punjab ,Congress ,constituencies ,North , Congress, Northern States, Abandonment, Comfort, Punjab, 8 Volume, Leadership
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து