×

டெல்லியில் 7 தொகுதிகளையும் மீண்டும் கைப்பற்றுகிறது பாஜ

* துடைக்கப்பட்ட ஆம் ஆத்மி
* ஷீலா தீட்சித், மாகென் பின்னடைவு

புதுடெல்லி, மே 24: டெல்லியின் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் பாஜ கட்சி வெற்றி முகத்தில் முன்னேறி வருகிறது. டெல்லியின் 7 மக்களவை தொகுதிகளில் பாஜ கட்சி 5 தொகுதிகளில் காங்கிரசையும், 2 தொகுதிகளில் ஆம் ஆத்மியையும் பின்னுக்கு தள்ளியுள்ளது. இதையொட்டி, பாஜ கட்சி அலுவலகத்தில் தொண்டர்களின் உற்சாகம் கரைபுரள தொடங்கியுள்ளது. படடாசுகள், வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

டெல்லி மேற்கு தொகுதியில் போட்டியிட்ட பாஜ எம்பி பர்வேஷ் வர்மா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரசின் மகிபால் மிஸ்ராவை காட்டிலும் சுமார் 3.49 லட்சம் வாக்குகள் முன்னிலையில் இருந்தார். இவர் இதே தொகுதியில் கடந்த முறை 2.68 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே சாதனையாக இருந்தது.

பாடகராக இருந்து அரசியல்வாதி அவதாரம் எடுத்த ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் வடமேற்கு டெல்லி தொகுதியில் தன்னை எதிர்த்த ஆம் ஆத்மியின் ககன் சிங்கை காட்டிலும் 3.40 லட்சம் வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். காங்கிரசின் ராஜேஷ் லிலோதியா மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.

வடகிழக்கு டெல்லியில் போட்டியிட்ட மாநில பாஜ தலைவர் மனோஜ் திவாரி, காங்கிசின் முன்னாள் முதல்வரான ஷீலா தீட்சித்தை காட்டிலும் சுமார் 2.99 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். இதே தொகுதியில் ஆம் ஆத்மியின் திலிப் பாண்டே மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.

கிழக்கு டெல்லியில் போட்டியிட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் பிரபலம் கவுதம் கம்பீர், தன்னை எதிர்த்த காங்கிரசின் அரவிந்த் சிங் லவ்லி மற்றும் ஆம் ஆத்மியின் அடிசியை காட்டிலும் சுமார் 2.38 லட்சம் வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகிக்கிறார். புதுடெல்லி தொகுதி தற்போதைய எம்பியான பாஜவின் மீனாட்சி லெகி, காங்கிரசின் அஜய் மாகெனை காட்டிலும் 1.98 லட்சம் வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலையில் இருந்தார்.
 
அதேபோன்று, தெற்கு டெல்லியில் போட்டியிட்ட மற்றொரு சிட்டிங் எம்பியான ரமேஷ் பிதூரி, சுமார் 2.26 லட்சம் வாக்குகளுடன் ஆம் ஆத்மியின் ராகவ் சதாவை காட்டிலும் முன்னிலையில் இருந்து வருகிறார். சாந்தினி சவுக் தொகுதியில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன், காங்கிரசின் ஜே பி அகர்வாலுடன் 64,659 என்கிற குறைந்த வாக்குகள் முன்னிலையுடன் மல்லுகட்டி வருகிறார். தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

டெல்லியின் அனைத்து தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை எந்தவித பிரச்னையும், அசம்பாவிதமும் இன்றி நடநது கொண்டுள்ளது. சட்டம் ஒழுங்கு நிலையும் கட்டுக்குள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். வாக்கு எண்ணிக்கை குறித்த இறுதிகட்ட நிலவரம் தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிட உள்ளது.


Tags : BJP ,Delhi , Delhi, 7 constituency, captures, Bhaj
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...