×

ராஜஸ்தானை மொத்தமாக சுருட்டிய பாஜ

ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 தொகுதிகளிலும் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது. மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் பரிதாப தோல்வி அடைந்துள்ளது. ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் 4வது மற்றும் 5வது கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. பாஜ, காங்கிரஸ், இதர கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 255 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இங்கு பாஜ மற்றும் ராஷ்டிரிய லோக் தந்திரிக் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டன.

பாஜ 24 தொகுதிகளிலும், முன்னாள் பாஜ தலைவரும் ராஷ்டிரிய லோக் தந்திரிக் கட்சியின் தலைவருமான  ஹனுமன் பெனிவால்  ஒரு தொகுதியில் போட்டியிட்டார். கடந்த 2014ம் ஆண்டு மொத்தமுள்ள 25 தொகுதிகளையும் பாஜ கைப்பற்றியது. எனவே இந்த முறையாவது கணிசமான இடங்களை பிடிக்க காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டியது.

இங்கு  ஏப்ரல் 29 ம் தேதி 13 தொகுதிகளிலும்,  மே 6 ம் தேதி 12 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது.  முதல் கட்ட தேர்தலின்போது 68.22 சதவீதம், இரண்டாவது கட்ட வாக்குப்பதிவின்போது 63.78 சதவீதம் வாக்குகள் பதிவானது. மொத்தம் 66.12 சதவீதம் வாக்குகள் பதிவானது. இது கடந்த 67 ஆண்டுகளை காட்டிலும் அதிகமாகும்.

இந்நிலையில் நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே மொத்தமுள்ள 25 தொகுதிகளிலும் பாஜ வேட்பாளர்களே முன்னிலை பெற்று இருந்தனர். மாலையில் 25 இடங்களிலும் பாஜ வேட்பாளர்களே ஆதிக்கம் செலுத்தினார்கள். கடந்த தேர்தலை போலவே இந்த முறையும் 25 மக்களவை தொகுதிகளும் பாஜவசமானது. மாநிலத்தில் ஆளும் காங்கிரசால் இந்த தேர்தலில் ஒரு தொகுதியை கூட பெற முடியாமல் போனது. அரச குடும்ப வாரிசுகள் ராஜஸ்தானில் அரச குடும்ப பின்னணி கொண்ட 3 பேர், மக்களவை தேர்தலில் போட்டியிட்டனர்.

* பாஜ.வை சேர்ந்த தியா குமாரி, ஜெய்ப்பூர் அரச குடும்பத்தை சேர்ந்தவர், இவர்  ராஜ்சமந்த் தொகுதியில் போட்டியிட்டார். இவர் காங்கிரஸ் வேட்பாளர் தேவ்கிநந்தனை 2.7 லட்சத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

* ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே. இவர் தோல்பூர் அரச குடும்பத்தை சேர்ந்தவர். இவருடைய மகன் துஷ்யந்த், பாஜ வேட்பாளராக ஜலாவார்-பாரான் தொகுதியில் போட்டியிட்டார். இவர், காங்கிரஸ் வேட்பாளர் பிரமோத் சர்மாவை 2.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
* காங்கிரஸ் வேட்பாளர் ஜிதேந்திர சிங், ஆல்வார் அரசு குடும்பத்தை சேர்ந்தவர். இவர், பாஜ வேட்பாளர் பாலக் நாத்திடம் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோற்றார்.

முதல்வர் மகன் தோல்வி:
ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட். இவர், ஜோத்பூர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். இவரை பாஜ வேட்பாளர் கஜேந்திர சிங் ஷெகாவத், 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

Tags : Rajasthan , Rajasthan, Bulk, curled, Bhaj
× RELATED ராஜஸ்தான் மாநிலம் ஜலாவார்...