×

குஜராத்தில் அம்புட்டும் மண்ணின் மைந்தருக்கே

காந்திநகர், மே 24: குஜராத் மாநிலத்தில் உள்ள 26 மக்களவை தொகுதிகளையும் பாஜ கைப்பற்றியது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் 26 மக்களவை தொகுதிகள் உள்ளன. 2014 மக்களவை தேர்தலில் பாஜ இவை அனைத்தையும் கைப்பற்றியது. இருப்பினும், கடந்த 2017ம் ஆண்டு இங்கு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசுக்கு கணிசமான இடங்கள் கிடைத்தன. அப்போது, பாஜ 99 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்தது.

காங்கிரஸ் 77 இடங்கள் பெற்று வலிமையான எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது. சட்டப்பேரவை தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டதால், மக்களவை தேர்தலிலும் இது எதிரொலிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இங்கு தீவிர பிரசாரம் செய்த மோடி, ‘அனைத்து தொகுதிகளையும் எனக்கு தாருங்கள். இங்கு நான் ஒரு தொகுதியில் தோற்றாலும் தேர்தலில் தோற்றதாகவே அர்த்தம்’ என உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில், இம்மாநிலத்தில் நேற்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே, அனைத்து தொகுதிகளிலும் பாஜ முன்னிலை பெற்றது. இந்த மாநிலத்தில் காந்திநகர் தொகுதியில் பாஜ மூத்த தலைவர் அத்வானி பலமுறை வென்றுள்ளார். இந்த முறை அவருக்கு பதிலாக கட்சியின் தலைவர் அமித் ஷா களம் இறங்கினார். 69 சதவீத வாக்குகளுக்கு மேல் பெற்று 5.5 லட்சம் வாக்குகளுக்கு மேல் முன்னிலை பெற்றார்.
 
எல்லை மாநிலமான குஜராத்தில் தண்ணீர் பிரச்னையால் விவசாயம் பாதிக்கப்பட்டது. பயிர்க் காப்பீடும் பெரிய பிரச்னையாக உள்ளது. இருப்பினும், மோடி அலை, தேசிய வாதம் மற்றும் புல்வாமா தாக்குதலில் பதிலடி போன்றவை பாஜ.வுக்கு மீண்டும் இங்கு அனைத்து தொகுதிகளிலும் வெற்றியை பெற்றுத் தந்துள்ளது.

கடந்த 1984ம் ஆண்டில் இந்த மாநிலத்தில் காங்கிரஸ் பெரும்பான்மையாக இருந்தது. 24 இடங்களை அந்த கட்சி பெற்றிருந்தது. துவக்கத்தில் பாஜ.வுக்கு 18.64 சதவீத வாக்குகளே இருந்தன. தற்போது 30 ஆண்டுகள் கடந்த நிலையில் அந்த கடசிக்கு 60.11 சதவீத வாக்குகள் பெற்று வலிமைமிக்கதாக மாறியுள்ளது. 2009 தேர்தலில் கூட இந்த மாநிலத்தில் காங்கிரசுக்கு 11 இடங்கள் கிடைத்தன. ஆனால், தொடர்ந்து 2வது முறையாக எந்த கட்சிக்கும் ஒரு இடத்தை கூட விட்டுத் தராமல், அனைத்து இடங்களையும் பாஜ தக்கவைத்துள்ளது.

Tags : Gujarat , Gujarat, arrow, soil, mentor
× RELATED அப்பாவி உயிர்கள் போன பிறகு செயல்படும்...