×

மகாராஷ்டிராவில் பாஜ - சிவசேனா அபாரம்

மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் 41 தொகுதிகளை பாஜ-சிவசேனா கூட்டணி கைப்பற்றியது. மகாராஷ்டிராவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பாஜ-சிவசேனா கூட்டணிதான் பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து வந்தது. இந்த நிலையில், மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் பாஜ-சிவசேனா கூட்டணி 41 இடங்களை கைப்பற்றி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. பாஜ 23 தொகுதிகளிலும் சிவசேனா 18 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. கடந்த மக்களவைத் தேர்தலிலும்  மகாராஷ்டிராவில் பாஜ 23 இடங்களிலும், சிவசேனா 18 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மூத்த பாஜ தலைவர்களான மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி மற்றும் சுபாஷ் பாம்ரே, மகாராஷ்டிரா மாநில பாஜ தலைவர் ராவ்சாகேப் தன்வே, மறைந்த பாஜ தலைவர் கோபிநாத் முண்டேயின் மகள் பிரீத்தம் முண்டே முறையே நாக்பூர் மற்றும் துலே, ஜால்னா மற்றும் பீட் தொகுதிகளில் வெற்றி பெற்றனர். அதே நேரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் மற்றும் மும்பை காங்கிரஸ் தலைவர் மிலிந்த் தேவ்ரா உட்பட அனைத்து காங்கிரஸ் வேட்பாளர்களும் தோல்வி அடைந்தனர்.
 
மூத்த காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணா விகே பாட்டீலின் மகன் சுஜய் விகே பாட்டீல் மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரசில் இருந்து விலகி பாஜ.வில் சேர்ந்ததை அடுத்து அவருக்கு அகமத்நகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. அந்த தொகுதியில் அவர் வெற்றி பெற்றார்.

இதேபோல மாவல் தொகுதியில் போட்டியிட்ட சிவசேனா வேட்பாளர் ஸ்ரீரங்க் பார்னே தன்னை எதிர்த்து போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் பார்த் பவாரை 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். பாராமதி தொகுதியில் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே மீண்டும் வெற்றி பெற்றார்.

இந்த தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் 5 இடங்களில் அதாவது கடந்த தேர்தலை விட கூடுதலாக ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. அதே வேளையில், கடந்த முறை 2 தொகுதிகளை வென்ற காங்கிரஸ் கட்சி இந்த முறை கட்சிரோலி தொகுதியில் மட்டுமே முன்னிலை பெற்றிருந்தது. நாண்டெட் தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் அசோக் சவான், பாஜ வேட்பாளர் பிரதாப்ராவ் சிக்கிலிகரிடம் தோல்வியடைந்தார்.

அசாசுதீன் ஓவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியுடன் இணைந்து வஞ்சித் பகுஜன் அகாடி என்ற கூட்டணியை உருவாக்கி வேட்பாளர்களை நிறுத்திய பிரகாஷ் அம்பேத்கரின் பாரிப் பகுஜன் மகாசங் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் தோல்வியடைந்தனர். பிரகாஷ் அம்பேத்கரும் தான் போட்டியிட்ட அகோலா, சோலாப்பூர் ஆகிய இரு தொகுதிகளிலும் தோல்வியடைந்தார்.

மும்பையில் உள்ள 6 மக்களவைத் தொகுதிகளையும் பாஜ-சிவசேனா கூட்டணி இரண்டாவது முறையாக இந்த தேர்தலிலும் கைப்பற்றி இருக்கிறது. வடக்கு மும்பை தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிட்ட கோபால் ஷெட்டி தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஊர்மிளா மாடோன்கரை தோற்கடித்தார். வடமத்திய மும்பையில் பிரியா தத்தை பாஜ வேட்பாளர் பூனம் மகாஜன் இரண்டாவது முறையாக தோற்கடித்தார்.

Tags : Maharashtra ,Bhajan ,Shiv Sena , Maharashtra, Bhaj - Shiv Sena, is great
× RELATED ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானேவை களம் இறக்கியது பா.ஜ