×

உபி.யில் பகுஜன் - சமாஜ்வாடி கூட்டணி படுதோல்வி 63 இடங்களை தூக்கியது தே.ஜ கூட்டணி

லக்னோ, மே 24: உத்தரப் பிரதேசத்தில் பாஜ தலைமையிலான தேஜ கூட்டணி 63 இடங்களை கைப்பற்றியது. உத்தரப் பிரதேசத்தில் கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் பாஜ 71 இடங்களிலும், சமாஜ்வாடி 5 இடங்களிலும் வெற்றி பெற்றன. பகுஜன் சமாஜ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

இதைத் தொடர்ந்து, இம்மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜ அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதனால், இந்த மக்களவை தேர்தலில் ஆளும் பாஜ.வை வீழ்த்த, காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இத்திட்டம் தோல்வியில் முடிந்தது. எதிரி கட்சிகளாக இருந்த சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும், காங்கிரசை ஓரம்கட்டி விட்டு கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. அதே நேரம், ராகுலின் அமேதி, சோனியாவின் ரேபரேலி தொகுதிகளில் மட்டும் இந்த கூட்டணி வேட்பாளர்களை நிறுத்தவில்லை.

இக்கட்சிகளின் இந்த முடிவு காங்கிரசுக்கு ஏமாற்றத்தை அளித்தாலும், தனித்து போட்டியிட முடிவு செய்தது. இதற்காக, கட்சியை பலப்படுத்த பிரியங்கா காந்தி அரசியலில் களம் இறக்கப்பட்டார். அவருக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் மற்றும் உ.பி கிழக்கு தொகுதி பொறுப்பாளர் பதவிகள் வழங்கப்பட்டன. பிரியங்காவும் உ.பி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். ஆனால், இது எதிர்பார்த்த பலன் அளிக்கவில்லை.  

இம்மாநிலத்தில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், தேஜ கூட்டணி 63 இடங்களை பெற்றது. பகுஜன் சமாஜ் 10 இடங்களிலும், சமாஜ்வாடி 6 இடங்களிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் கூட்டணி ஒரு இடத்தில் மட்டுமே வென்றது. இம்மாநில தேர்தல் முடிவு, தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் வெற்றிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.

Tags : coalition ,SP , In UP, Bahujan Samajwadi coalition, foiled, threw up, the DM coalition
× RELATED ஊரடங்கு காலங்களில் நடந்த தீவிர...