×

ஒடிசாவில் பட்நாயக் 5ம் முறையாக வெற்றி

ஒடிசாவில் மக்களவை தேர்தலுடன் ஒடிசா சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சியும் பாஜ மற்றும்  காங்கிரஸ்  கட்சிகளும் மோதின. இதில் மொத்தமுள்ள 147 தொகுதியில் ஒன்றில் வேட்பாளர் இறந்ததால், 146 தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. இங்கு ஆட்சி அமைக்க 74  இடங்கள் தேவை. இதில் ஆளும் பிஜு ஜனதா தளம் 102 இடங்களை கைப்பற்றியது. பாஜ 28, காங்கிரஸ்  15 இடங்களிலும் வென்றன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தொகுதியை கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம், ஒடிசாவில் பிஜு ஜனதா தள தலைவரும்,  முதல்வருமான  நவீன் பட்நாயக் தொடர்ந்து 5வது முறையாக ஆட்சியை பிடித்து சாதனை படைத்துள்ளார். இதேபோல், 21 மக்களவை தொகுதிகளில் பிஜு ஜனதா தளத்துக்கு 12 இடங்கள் கிடைத்தன. பாஜ 9 தொகுதிகளை கைப்பற்றியது.


சாதனை பட்டியலில் நாயக்

கடந்த 1997ம் ஆண்டு ஜனதா தளத்தில் இருந்து வெளியேறி பிஜு ஜனதா தளத்தை நவீன் பட்நாயக் உருவாக்கினார். மத்தியில் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் அமைச்சராகவும் பதவி வகித்தார். பின்னர், 2000ல் ஆண்டு ஒடிசாவில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார். அதன் பிறகு நடந்த  4 சட்டப்பேரவை தேர்தல்களிலும் அவருடைய கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி ஆட்சியைத் தக்க வைத்தது. நவீன் பட்நாயக் தொடர்ந்து முதல்வர் பதவியை வகித்தார். இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்த போதிலும், ஒடிசாவில் இவருக்கு எதிர்ப்பு அலை கிளம்பவில்லை. குஜராத்தில் மோடி, மேற்கு வங்கத்தில் ஜோதிபாசு, திரிபுராவில் மாணிக் சர்க்கார் ஆகியோர் மட்டுமே நீண்ட காலமாக முதல்வராக இருந்து சாதனை படைத்துள்ளனர். அந்த வரிசையில் இப்போது நவீன் பட்நாயக்கும் சேர்ந்துள்ளார்.

Tags : Patnaik ,Odisha , Odisha, Patnaik, 5 wins
× RELATED ஒடிசாவில் கடும் வெப்ப அலை; பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை