×

பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையை இருமுறை தடுத்து நிறுத்திய அதிமுக வேட்பாளர்

*அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம்

* மறியலால் பதற்றம்; போலீஸ் குவிப்பு


சென்னை: பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையை இருமுறை நிறுத்திய அதிமுக வேட்பாளர், தேர்தல் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மறியலில் ஈடுபட்டதால் அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் குவிக்கப்பட்டனர். வடசென்னை நாடாளுமன்ற தொகுதி மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை, ராணிமேரி கல்லூரியில் நேற்று நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்த நாள் அன்று மேற்கண்ட தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டு, பின்னர் சீலிடப்பட்டு தனித் தனி அறைகளில் வைக்கப்பட்டது. கடந்த ஒரு மாதமாக இந்த வாக்கு பெட்டிகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கி, ஒவ்வொரு சுற்றாக வாக்குகள் எண்ணப்பட்டது. அனைத்து முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் சீல் பிரிக்கப்பட்டு வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்லபட்டது. முதல் 3 சுற்றுகள் முடிவடைந்து முறைப்படி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில், திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் முன்னிலையில் இருந்தார்.

இதையடுத்து, 4வது சுற்றுகள் எண்ணுவதற்காக தேர்தல் அலுவலர்கள் வாக்குப் பதிவு இயந்திரங்களின் சீலை அகற்றினர். அப்போது 6ம் எண் கொண்ட வாக்குப்பதிவு இயந்திரம், வடசென்னை நாடாளுமன்ற தொகுதிக்கானது என்றும், இங்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறி அதிமுக முகவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனடியாக வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்று தேர்தல் அலுவலர்களிடம் முறையிட்டனர். அப்போது, தேர்தல் நடத்தும் உதவி அதிகாரி மற்றும் போலீசாருடன் அதிமுக முகவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. அப்போது அதிமுக வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் அங்கு வந்து தேர்தல் அதிகாரியிடம், இதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் அங்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்ைத நடத்தினார். பின்னர், 4வது சுற்றை மட்டும் நிறுத்திவிட்டு மற்ற சுற்றுகள் எண்ணலாம் என்று சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் அதிமுகவினர் அதை ஏற்கவில்லை. இதனால் இரண்டரை மணி நேரத்துக்கு மேலாக வாக்கு எண்ணிக்கை நடைபெறவில்லை. பின்னர் தேர்தல் அதிகாரி உரிய விளக்கம் அளித்ததை தொடர்ந்து மீண்டும் பிற்பகல் 2.30 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது. 4வது சுற்றில் பிரச்னைக்குரிய அந்த ஒரு பெட்டியை தவிர மற்ற பெட்டிகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில் மீண்டும் 5வது சுற்றுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அப்போது வாக்கு இயந்திரங்களை முகவர்கள் முன்னிலையில் சீல் பிரித்த போது, 5ம் எண் கொண்ட வாக்குப் பதிவு இயந்திரத்துக்கும், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள கன்ட்ரோல் யூனிட் வைக்கப்பட்டிருந்த பெட்டியின் எண்ணுக்கும் இடையே வித்தியாசம் இருப்பதாக அதிமுக முகவர்கள் புகார் தெரிவித்தனர். அதோடு வாக்கு எண்ணிக்கையை நடத்த கூடாது என்று மீண்டும் தகராறில் ஈடுபட்டனர். தேர்தல் நடத்தும் அதிகாரி முறைகேட்டில் ஈடுபடுவதாக கூறி வாக்கு எண்ணும் மையத்துக்குள் கோஷம் எழுப்பினர். இதற்கிடையே, அதிமுக வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தேர்தல் அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு வெளியில் வந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டார். இதனால் மீண்டும் வாக்கு எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. அங்கு போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் மற்றும் தேர்தல் அதிகாரி பிரகாஷ் ஆகியோர் வந்து எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என்று விளக்கம் அளித்தனர். ஆனாலும் தொடர்ந்து பிரச்னை செய்ததால் வாக்கு எண்ணும் மையத்துக்கு வெளியே அதிமுகவினர் குவிய தொடங்கினார். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியது இதையடுத்து ராணி மேரி கல்லூரி வளாகம் முழுவதும் போலீஸ் குவிக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும், துணை ராணுவ படையினரும் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்பு மீண்டும் வாக்கு எண்ணும் பணி தொடங்கி நடைபெற்றது.

ஆணையத்தில் புகார்

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் நிருபர்களிடம் கூறியதாவது: பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் 5வது சுற்றின் போது, 6வது மேஜைக்கு கொண்டு வரப்பட்ட வாக்கு இயந்திரத்தின் எண் மாறி வந்தது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம். அதன் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற தவறுகளுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கையில் திமுகவைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு ஒரே மாதிரி  5,000 என்று  அளித்துள்ளனர். எனக்கு ஆயிரம் வாக்குகள்தான் அளித்துள்ளனர். சம்பந்தம் இல்லாத மக்கள் நீதி மய்யத்திற்கு 1500 வாக்கு வாங்கியதாக தெரிவிக்கின்றனர். மற்றவர்களுக்கு ஒரே மாதிரி பூஜ்ஜியம் அளித்துள்ளனர். ஆர்.கே.நகர் தொகுதியில் இதேபோன்று தான் அளித்தனர். அவைத்தலைவர் மதுசூதனனுக்கு   2500 வாக்கு அளித்தார்கள்.  அதேபோன்றுதான் தற்போது எனக்கும் அளித்துள்ளனர்.  இதற்கெல்லாம் நீதிமன்றம் செல்லப்போவதில்லை.  இவ்வாறு அவர் கூறினார்.

நிருபர்கள் வெளியேற்றம்

பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையை நிறுத்தும்படி அதிமுக முகவர்கள் தகராறு செய்தனர். அப்போது, செய்தி ேசகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் அந்த பகுதியில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதனால் தேர்தல் அதிகாரிகள், போலீசாருடன் பத்திரிகையாளர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : candidate ,AIADMK ,Perambur Assembly , Perambur, Assembly constituency, AIADMK candidate
× RELATED வடசென்னை தொகுதிக்கு உட்பட்ட...