×

இடைத்தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி தமிழகத்தில் எடப்பாடி ஆட்சி கவிழுமா?: 9 இடங்களில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றதால் சிக்கல்

சென்னை: தமிழகத்தில் நடைபெற்ற 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக 13 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 9 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. இதனால் தமிழகத்தில் எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழும் நிலை உருவாகியிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 18ம் தேதி மற்றும் மே மாதம் 19ம் தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை 8 மணிக்கு எண்ணப்பட்டு முன்னணி நிலவரங்கள் வெளியாகின. இதில் 38 நாடாளுமன்ற தொகுதிகளில் 37 இடங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றுள்ளது. தேனி தொகுதியில் மட்டுமே அதிமுக வேட்பாளரும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத் சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.அதேநேரம் தமிழகத்தில் நடைபெற்ற 22 சட்டமன்ற தொகுதியில் 13 இடங்களில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக வேட்பாளர்கள் 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். திமுக பெற்றுள்ள வெற்றியை விட அதிமுக குறைந்த இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சியில் நீடிக்குமா அல்லது கவிழுமா என்ற பரபரப்பு தற்போது ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் பெரும்பான்மை பெற 118 இடங்கள் தேவை. அதிமுகவில் 114 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதில், டிடிவி தினகரன் ஆதரவாளர்கள்  பிரபு (கள்ளக்குறிச்சி), ரத்தினசபாபதி (அறந்தாங்கி), கலைச்செல்வன் (விருத்தாசலம்) ஆகிய மூன்று எம்எல்ஏக்கள் அதிமுகவுக்கு எதிராக உள்ளனர். அவர்களுக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த நோட்டீசிற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.அதேபோல, அதிமுகவில் தற்போது எம்எல்ஏக்களாக உள்ள தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை), கருணாஸ் (முக்குலத்தோர் புலிப்படை), தமிமுன் அன்சாரி (மனிதநேய ஜனநாயக கட்சி) ஆகிய மூன்று எம்எல்ஏக்கள் அதிமுகவுக்கு உறுதியாக ஆதரவு தருவார்கள் என்று கூற முடியாது. இதனால், தற்போது அதிமுகவுக்கு சபாநாயகரையும் சேர்த்து 108 எம்எல்ஏக்கள்தான் உள்ளனர். இதனால் அதிமுக ஆட்சிக்கு எந்த சிக்கலும் இல்லாமல் தொடர வேண்டும் என்றால் இந்த தேர்தலில் 10 இடங்களில் அதிமுக வெற்றிபெற வேண்டும். ஆனால், 9 இடங்களில்தான் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இதனால் அதிமுகவின் பலம் 117ஆக உயர்ந்துள்ளது. இன்னும் மெஜாரிட்டிக்கு ஒரு சீட் தேவை. அதேநேரத்தில், அதிமுகவில் தற்போது முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் அமைச்சர் பதவி கேட்டு போர்க்கொடி தூக்கியுள்ளார். இதனால் அவரும் வெளியில் வந்தால் அதிமுக ஆட்சி கவிழும் நிலை தற்போது உருவாகியுள்ளது. இதேபோன்று, மேலும் சில அதிமுக எம்எல்ஏக்கள் அமைச்சர் பதவி கேட்டு போர்க்கொடி தூக்கும் நிலையும் உள்ளது.

தற்போது தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி மற்றும் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் 3 எம்எல்ஏக்கள், தோப்பு வெங்கடாசலம் உள்ளிட்டோர் கையில்தான் அதிமுக ஆட்சி உள்ளது. இதுபோன்ற ஒரு தர்மசங்கடமாக நிலை அதிமுக அரசுக்கு தற்போது ஏற்பட்டுள்ளதால், வரும் நாட்களில் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க அதிக வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் அதிமுக ஆட்சி கவிழும் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது.

Tags : victory ,DMK ,by-elections , DMK ,problem , AIADMK ,9 seats?
× RELATED நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான...