×

மக்களவை, இடைத்தேர்தல்: அமமுக படுதோல்வி... ஃபீனிக்ஸ் பறவையைப் போல மீண்டு வருவோம்..! டிடிவி தினகரன் டிவிட்

சென்னை: மக்களவை, சட்டசபை இடைத்தேர்தல் என தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 59 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட டி.டி.வி தினகரன் படுதோல்வியடைந்துள்ளது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் கடந்த 19-ம் தேதி முடிவடைந்தது. தமிழகத்தில் கடந்த மாதம் 18ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் பாஜக 351 இடங்களிலும், காங்கிரஸ் 89 இடங்களிலும், மற்றவை 102 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 38 மக்களவை தொகுதிகளில் திமுகவும், 1 இடங்களில் அதிமுகவும் முன்னிலையில் உள்ளது. 22 சட்டமன்ற தொகுதிகளில் திமுக கூட்டணி 13 இடங்களிலும், அதிமுக 9 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவடைய உள்ள நிலையில், அ.ம.மு.க எந்தத் தொகுதியிலும் முன்னிலையில் வரவில்லை. அக்கட்சியின் பெரும்பான்மை மிக்க இடங்களான  தேனி, ராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில்கூட அக்கட்சி பெரிய அளவில் வாக்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் சில இடங்களில் நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிகளைவிட பின் தங்கியுள்ளது.

இது தொடர்பாக டிடிவி தினகரன் டிவிட்டரில் பதிவு;


மக்கள் தீர்ப்புக்குத் தலைவணங்குகிறோம்!
நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் தமிழக மக்கள் அளித்த தீர்ப்புக்குத் தலை வணங்குகிறோம். தேர்தல் அரசியலில் வெற்றி – தோல்வி என்பது இயல்பானது.

எத்தனையோ இன்னல்களுக்கும், இடையூறுகளுக்கும் இடையே கழகம் காக்க, மக்கள் பணியாற்ற சுயேச்சைகளாக களமிறங்கியவர்களுக்கும், இரவு- பகல் பார்க்காமல் உழைத்த கழக உடன்பிறப்புகளுக்கும், கழகத்திற்கு வாக்களித்து ஆதரவளித்த நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.

இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கற்றுத்தந்த துணிவோடு, ஃபீனிக்ஸ் பறவையைப் போல மீண்டும் எழுந்து நிற்போம். தூய்மையான அன்போடு தமிழ்நாட்டு மக்களின் மனங்களை முழுமையாக வென்றெடுக்க தொடர்ந்து பாடுபடுவோம். தமிழகத்தின் உரிமைகளுக்காக அமமுகவின் குரல் எப்போதும் போல ஓங்கி ஒலித்திடும்.

Tags : Lok Sabha ,election ,DTV Dinakaran ,Phoenix , Lok Sabha, by-elections, Ammukha, fiasco
× RELATED 2024 லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் புது...