×

வயநாட்டில் வரலாறு படைத்தார் ராகுல்..... 7 லட்சத்து 34 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி

வயநாடு: இந்திய மக்களவை தேர்தல் வரலாற்றில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சாதனை படைத்துள்ளார். வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி 7லட்சத்து 34 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாடு மற்றும் அமேதி தொகுதியில் போட்டியிட்டார். இதில் அமேதி தொகுதியில் ராகுல்காந்தி பின்னடைவை சந்தித்தாலும், கேரளாவின் வயநாடு தொகுதியில் வரலாறு காணாத அளவு வாக்குகள் பெற்று சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் இந்தியாவிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றவர் என்ற பெருமையை ராகுல்காந்தி பெற்றுள்ளார்.

இதற்கு முன் பாஜகவை சேர்ந்த பிரீதம் முண்டே 6 லட்சத்து 96 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதே சாதனையாக இருந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் மகளான இவர், தன் தந்தையின் மறைவைத் தொடர்ந்து அவர் எம்பி ஆக இருந்த மகாராஷ்டிர மாநிலம் பீட் தொகுதியில் போட்டியிட்டார். கடந்த 2014ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பிரீதம் முண்டே தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை சுமார் 6 லட்சத்து 96 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். 2004ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் அனில் பாசு மேற்கு வங்க மாநிலம் அரம்பாக் தொகுதியில் 5 லட்சத்து 92 ஆயிரத்து 502 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்தினார். இது வரை பதிவான வெற்றிகளில் இது 3வது பெரிய வெற்றியாக உள்ளது.

இப்பட்டியலில் 4வது இடத்தில் முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் உள்ளார். தென்னிந்தியாவிலிருந்து தேர்வான முதல் பிரதமரான நரசிம்மராவ் 1991ம் ஆண்டு ஆந்திர மாநிலம் நந்தியால் தொகுதியில் 5 லட்சத்து 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014ம் ஆண்டு குஜராத் மாநிலம் பரோடா தொகுதியில் சுமார் 5 லட்சத்து 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார்.


Tags : Rahul ,country ,winner , Rahul Gandhi, Lok Sabha election, Wayanad
× RELATED சொல்லிட்டாங்க…