×

ஒடிசாவில் மீண்டும் அமைகிறது பிஜு ஜனதா தள ஆட்சி: 5-வது முறையாக முதல்வராகிறார் நவீன் பட்நாயக்

ஒடிசா: ஒடிசா மாநில சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்றி நவீன் பட்நாயக் மீண்டும் முதல்வர் ஆகிறார். நாடு முழுவதும் மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதில், பாஜக 331 இடங்களிலும், காங்கிரஸ் 97 இடங்களிலும், மற்றவை 115 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. இதன் காரணமாக மத்தியில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகிறார். இதையடுத்து, ஒடிசா மாநில சட்டமன்ற தேர்தலிலும் பெரும்பான்மை தொகுதிகளை பெற்று நவீன் பட்நாயக் 5வது முறையாக முதல்வர் ஆகிறார். 147 தொகுதிகளை கொண்ட ஒடிசா சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நான்கு கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலில், பிஜு ஜனதா தளம், காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகியவை தனித்தே போட்டியிட்டன. இதில் காங்கிரஸ் 139 தொகுதிகளில் போட்டியிட்டது. பகுஜன் சமாஜ் வாடி (107 இடங்கள்), ஆம் ஆத்மி (15) தொகுதிகளில் போட்டியிட்டது. முன்னதாக, ஒடிசாவில் அசைக்க முடியாத சக்தியாக நவீன்பட்நாயக் மீண்டும் ஆட்சியை தக்க வைப்பார் என்று கருத்து கணிப்புகள் தெரிவித்தன.

கருத்துகணிப்புகள் தெரிவித்தபடி ஓட்டு எண்ணிக்கையில் நவீன்பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சி முன்னிலையில் உள்ளது. பல தொகுதிகளில் அக்கட்சி வேட்பாளர்களே தொடர்ந்து முன்னிலையில் வகித்து வருகின்றனர். காலை 11 மணி நிலவரப்படி, 89 தொகுதிகளில் முன்னணி நிலவரம் வெளியான போது பிஜு ஜனதாதளம் 63 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. பா.ஜனதா 19 தொகுதிகளிலும், காங்கிரஸ் 7 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்தன. ஒடிசாவில் மெஜாரிட்டிக்கு 74 இடங்கள் தேவை. பிஜு ஜனதா தளம் தொடர்ந்து முன்னிலையில் இருப்பதால் ஆட்சியை தக்க வைக்கிறது. தற்போதைய நிலவரப்படி, பிஜு ஜனதாதளம் - 100 இடங்கள், பாரதிய ஜனதா - 28 மற்றும் காங்கிரஸ் 14 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதனால் பிஜு ஜனதாதளம் தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். நவீன் பட்நாயக் தொடர்ந்து 5-வது முறையாக முதல்வர் பதவியை பிடிக்கவுள்ளார்.  இவர் கடந்த 2000, 2004, 2009, 2014-ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தல்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மீண்டும் தனது ஆட்சியை ஒடிசாவில் தக்க வைத்துள்ளார்.

Tags : Naveen Patnaik ,Biju Janata Dal , Naveen Patnaik, Chief Minister, Odisha, Assembly election, Biju Janata Dal
× RELATED ஒடிசாவில் பா.ஜ, பிஜூஜனதா தளம் கூட்டணி முறிந்தது