×

பொய் கருத்து கணிப்பால் மனம் தளர வேண்டாம் அடுத்த 24 மணி நேரம் நமக்கு மிக முக்கியமானது: தொண்டர்கள் விழிப்புடன் இருக்க ராகுல் அறிவுரை

புதுடெல்லி: ‘‘பொய்யான தேர்தல் கருத்து கணிப்பு முடிவால் மனம் தளர்ந்து விட வேண்டாம்,’’ என கட்சி தொண்டர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததை தொடர்ந்து, கடந்த 19ம் தேதி, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை ஊடகங்கள் வெளியிட்டன. இதில், ஆளும் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டது.

இதனால், எதிர்க்கட்சி தொண்டர்கள் மனம் தளர்ந்துள்ளனர். குறிப்பாக, தங்கள் கட்சி ஆட்சியை பிடிக்கும் என உறுதியாக நம்பிக் கொண்டிருந்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு இது கவலை அளித்துள்ளது.  இவர்களுக்கு தைரியம் அளிக்கும் வகையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று முன்தினம் வெளியிட்ட வேண்டுகோளில், `ஊடகங்கள் வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் ஒரு வதந்தி. அதை கேட்டு யாரும் மனம் தளர வேண்டாம்’ என தைரியம் அளித்தார்.

 இந்நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், கட்சி தொண்டர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும்  நேற்று தைரியம் அளித்துள்ளார். டிவிட்டரில் நேற்று அவர் வெளியிட்ட பதிவில், ‘அடுத்த 24 மணி நேரம் நமக்கு மிக முக்கியமானது என்பதால் நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். உண்மைக்காக நீங்கள் போராட வேண்டும். வெளியாகியுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகள் போலியானது என்பதால் அது பற்றி நினைத்து மனம் தளராதீர்கள். உங்கள் மீதும் காங்கிரஸ் மீதும் நம்பிக்கை வையுங்கள். உங்களின் கடின உழைப்பு ஒருபோதும் வீணாகாது. ஜெய்ஹிந்த்...’ என கூறியுள்ளார்.

Tags : Rahul ,volunteers , False opinion polls, do not get depressed, next 24 hours, volunteers, vigilant, Rahul's advice
× RELATED அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்