×

5 மாதங்களுக்கு பிறகு பல சிக்கல்களை கடந்து கர்நாடக எல்லையை அடைந்தது பிரமாண்ட பெருமாள் சிலை: வழியெங்கும் பூஜை செய்து மக்கள் வழிபாடு

ஓசூர்: 350 டன் எடையுள்ள பிரமாண்ட பெருமாள் சிலை, ஓசூர் வழியாக நேற்று கர்நாடக மாநில எல்லையான ஜூஜூவாடியை அடைந்தது. கர்நாடக மாநிலம் ஈஜிபுராவில் 108 அடி உயர பீடத்தில் நிறுவ பிரமாண்ட கோதண்டராமர் சிலை, வந்தவாசி தாலுகா கொரக்கோட்டையில் இருந்து, கடந்த ஆண்டு டிசம்பர் 7ம் தேதி கிளம்பியது. தொடர்ந்து, பிப்ரவரி 9ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பள்ளத்திற்கு வந்தது. பாலங்கள் வழியாக சிலையை கொண்டு செல்ல வனத்துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் அனுமதி மறுத்தனர். இதனால், சாமல்பள்ளத்தில் பெருமாள் சிலை 3 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து, உரிய அனுமதி பெற்று மீண்டும் சிலை புறப்பட்டது. கடந்த 9ம் தேதி பேரண்டப்பள்ளி பகுதியை அடைந்த சிலை, ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே ஓடும் தென்பெண்ணையாற்றை கடந்து செல்ல வசதியாக, தற்காலிக மண்பாலம் அமைக்கப்பட்டது. அதை ஆய்வு செய்த பொறியாளர்கள், பாலம் மிகவும் குறுகலாகவும், சிலை கடக்கும் போது மண் சரிவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து, பாலத்தை 34 அடிக்கு அகலப்படுத்தி பலப்படுத்தும் பணிகள் நடந்தது. இதன் காரணமாக பிரமாண்ட பெருமாள் சிலை கடந்த 13 நாட்களாக பேரண்டப்பள்ளி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால், சிலையை தற்காலிக பாலத்தில் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து, மண்பாலத்தில் பெருமாள் சிலை கொண்டு செல்வதை தவிர்த்துவிட்டு, நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் தென்பெண்ணையாற்றின் அருகே உள்ள சிமென்ட் பாலத்தின் வழியாக சிலை புறப்பட்டது. பேரண்டப்பள்ளி, காந்திநகர், பத்தலபள்ளி உள்ளிட்ட பகுதிகள் வழியாக 7 கி.மீ தூரத்தை கடந்து, நேற்று மதியம் ஓசூர் நகரத்தை வந்தடைந்தது. ஓசூர் முதல் சிப்காட் பகுதியை கடந்து செல்லும்போது, ஏராளமான பக்தர்கள் தேங்காய் உடைத்தும், பூஜை செய்தும் வழிபட்டனர். தொடர்ந்து, ஓசூர் பஸ் நிலையம், மூக்கண்டப்பள்ளி, சிப்காட் வழியாக பெங்களூரு நோக்கி 7 கி.மீ தூரம் கொண்டு செல்லப்பட்ட சிலை தமிழக-கர்நாடக எல்லையான ஜூஜூவாடிக்கு சென்றது. அங்கு ஏராளமான பொதுமக்கள் சிலைக்கு பூஜை செய்து வழிபட்டனர். வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன், ஓரிரு நாட்களில் பெங்களூரு மாவட்ட கலெக்டரிடம் சிலையை ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில், திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர்  மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்க உள்ளதாக சிலை ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : carnival , Carnatic, the idol of Lord Perumal, the way of worship, the worship of the people
× RELATED ஜெர்மனியில் புகழ்பெற்ற கொலோன் கார்னிவல் திருவிழா கோலாகலம்.!!