×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலி முதலாமாண்டு நினைவு நாள் அனுசரிப்பு பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி: பலத்த போலீஸ் பாதுகாப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் முதலாமாண்டு நினைவுநாளையொட்டி  பலியான 13 பேருக்கு மாநகரின் பல்வேறு பகுதிகளில் பல்லாயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர் தூவியும்  கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து நடந்த போராட்டத்தின்போது கடந்த ஆண்டு மே 22ம் தேதி போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். 150க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்தின் ஓராண்டு நிறைவையொட்டி, துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சி தூத்துக்குடி மாநகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று  நடந்தது. பலியான 13 பேரின் படங்களை ஆங்காங்கே வைத்து மாலையணிவித்தும், மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்திய வண்ணம் இருந்தனர். குமரெட்டியாபுரம், மடத்தூர், மீளவிட்டான், முருகேசன் நகர், வீரபாண்டியபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட போராட்டம் நடந்த இடங்களில், துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் படங்களை வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் போராட்டகுழுக்களுக்கு தலைமை வகித்த போராட்ட ஓருங்கிணைப்பாளர்கள் பங்கேற்றனர்.

தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் உள்ள புனித தோமையார் ஆலயத்தில், துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் ஆன்மா சாந்தியடைய சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் பங்குத்தந்தை சதீஷ் தலைமையில் பங்கு மக்களும், பொதுமக்களும் திரளாகப் பங்கேற்றனர். பலியானவர்களின் கல்லறைகளில்  அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள், பொதுமக்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தூத்துக்குடி பனிமயமாதா பேராலயம் அருகே ஒரு ஓட்டலில்  நினைவேந்தல் கூட்டம் நடந்தது. ஓய்வுபெற்ற பேராசிரியை பாத்திமாபாபு தலைமை வகித்தார்.் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட குழுவினர், வர்த்தகர்கள், வணிகர் சங்கத்தினர் திரளாக பங்கேற்றனர். கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி, வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் முன்னிலை வகித்தனர். ஏராளமானோர், கருப்பு பேட்ஜ் மற்றும் கருப்பு சட்டை அணிந்தவண்ணம் பங்கேற்றனர்.

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்திலும் நாட்டுப்படகு மீனவர்கள், விசைப்படகு மீனவர்கள் மற்றும் தொழிலாளர்கள் அஞ்சலி செலுத்தினர். லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் துப்பாக்கி சூட்டில் பலியான கிளாஸ்டனுக்கு சிறப்பு திருப்பலி நடந்தது. தூத்துக்குடி சகாயமாதா ஆலயத்தில், பலியான மாணவி ஸ்னோலினுக்கு கத்தோலிக்க மறை மாவட்ட முன்னாள் ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு திருப்பலியும்  அன்னதான நிகழ்ச்சியும் நடந்தது.  பெரும்பாலான நாட்டுப்படகுகள் நேற்று மீன் பிடிக்க செல்லவில்லை. தூத்துக்குடி திருச்செந்தூர் ரோடு - கால்டுவெல் காலனி சந்திப்பு பகுதியில் பலியானவர்களை நினைவுகூரும் விதமாக 13 மரக்கன்றுகள் நடப்பட்டன. பாதுகாப்புக்காக 9 மாவட்டங்களைச் சேர்ந்த 3500 போலீசார் குவிக்கப்பட்டனர். ஆங்காங்கே தீயணைப்பு வாகனங்கள், கலவர தடுப்பு வாகனங்கள், அதிவிரைவு படை வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. உதயகுமார் உள்பட 2 பேர் கைது: தூத்துக்குடியில் நடந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் பச்சை தமிழகம் கட்சியின் நிறுவனரும், அணு உலை எதிர்ப்பாளருமான சுப.உதயகுமார், பங்கேற்பதாக இருந்தது. இதையொட்டி, நாகர்கோவில் இசங்கன்விளையில் உள்ள அவரது வீட்டுக்கு கோட்டார் போலீசார் நேற்று சென்று அவரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றி சென்றனர். ஆரல்வாய்மொழியில் உள்ள அக்கட்சியின் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் வீட்டுக்கும் அதிகாலையில் சென்று அவரை கைது செய்தனர்.

Tags : Tuticorin ,tens of thousands , Thoothukudi, gunfire, First Day Memorial Day, Adjustable, Strong Police Protection
× RELATED ஆணாக மாறிய தோழியிடம் இருந்து...