தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் வேதாந்தா குழுமத்துக்கு ஆதரவாகவே தமிழகஅரசு செயல்படுகிறது: திருமாவளவன் குற்றச்சாட்டு

சென்னை: வேதாந்தா குழுமத்துக்கு ஆதரவாகவே தமிழக அரசு செயல்படுகிறது என்று திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வேதாந்தா குழுமம் என்னும் கார்ப்பரேட் நிறுவனத்திற்காக தமிழக ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் திட்டமிட்டு நடத்திய வன்முறையால் 13 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதில் பலியான அப்பாவி மக்கள் அனைவருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன். பலியானவர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் தூத்துக்குடியில் அஞ்சலி செலுத்துவதற்கு கூட அனுமதிக்கப்படவில்லை என்பது வெந்தப் புண்ணில் வேல்பாய்ச்சுவதாக உள்ளது. தமிழக அரசு, குறிப்பாக காவல்துறையின் இத்தகைய கெடுபிடியான அடாவடிப் போக்கினை வன்மையாக கண்டிக்கிறோம்.

ஓராண்டு கடந்த நிலையிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. அத்துடன், வேதாந்தா குழுமத்திற்கு ஆதரவாகச் செயல்படும் போக்கினையே தமிழக அரசு கடைபிடித்து வருகிறது. அதற்கான சான்றாகவே தூத்துக்குடியில் இன்று காவல்துறையினர் நடந்துகொள்ளும் அடக்குமுறை போக்குகள் உறுதிப்படுத்துகின்றன. தூத்துக்குடியில் மட்டுமின்றி, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மோடி அரசு உரிமம் வழங்கியுள்ளது. இது ஒட்டுமொத்த தமிழக மக்களையும் கேவலப்படுத்துவதாக உள்ளது. பல வேதி நச்சு திட்டங்களின் மூலம் தமிழகத்தையே நாசமாக்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருவதை அறியமுடிகிறது. இத்தகைய நாசாக்கார நச்சுத்திட்டங்களிலிருந்து ஒட்டுமொத்த தமிழகத்தையே பாதுகாக்க வேண்டிய நெருக்கடி உருவாகியுள்ளது. எனவே, ஜனநாயக சக்திகள் யாவரும் ஒருங்கிணைந்து போராட இந்நாளில் உறுதியேற்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்

Tags : firing incident ,Tuticorin ,government ,Tamil Nadu ,Thirumavalavan ,Vedanta Group , Thoothukudi, firing, Thirumavalavan...
× RELATED மோசடியில் ஈடுபட்ட பெண் மீது நடவடிக்கை...